Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Thursday, March 24, 2011

வகை-தொகை:24/03/11

தரம் - என்றால் ஜப்பான் தான் ஞாபகத்தில் வரும். ஆனால் என்ன நடக்கிறது அங்கே? என் தொழில்நுட்ப மேலாளர் அடிக்கடி மேற்கோள் காட்டுவார் டொயடாவின் கோட்பாடுகள் (Toyata's principles)பற்றி. அங்கே ஒரு தகராறு, ஒரு கார்பகுதியை தவறாக தேர்ந்தெடுத்ததால். பிசாத்து பெறாத ஃப்ளோர் மேட் என்பதாலோ? கோடிக்கணக்கில் தண்டம் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது பரவாயில்லை, ஏதோ ஒரு கம்பெனியும் சில உயிர்களும் சம்பந்தபட்டது என்று வைத்துக்கொண்டால். ஆனால் அணுமின் உலை விடயம் அவ்வளவு லேசில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஒன்றில்லை. அட நம்ம நாடுதான் ஒரு தப்பான தட்டுமேலே இருக்கே, அதானாலே பூகம்பத்திற்கு பஞ்சமில்லையே-னு ஒரு கூடுதல் பொருப்பு (ஒரு சின்ன பொறுப்புகூட இல்லையேன்னு  சின்ன 'ர'  போட்டுட்டேன்)   இருக்க வேணாம்? IAEA-வின் எச்சரிக்கையை புறந்தள்ளியாச்சே. எந்த சிஸ்டமும் (பாதுகாப்போ,  தரமோ,  மேலாண்மையோ,  தயாரிப்போ)  ஒரு தொடர்ந்த மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும் காலத்தின் கோலங்களை கணக்கில் கொண்டு. மாற்றங்கள் அவசியமானவை. இல்லையேல் அம்பேல்தான்.

ஒரு ஜப்பானியரின் கடைப்பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாகிவிட்டன இப்போது நடந்த கோரத்தில். ஆனால் அடுத்த நாளே ஒரு அறிவிப்பு பலகை அவர் கடையின் வாசலில் - " எரிந்தழிந்தது எனது உடமைகள் மட்டுமே, அதிர்ஷ்டவசமாக என் நம்பிக்கையும், உறுதியும் எந்த சேதாரமுமில்லாமல் இருக்கின்றன... வியாபரம் திங்களிலிருந்து இயங்கும்!!!". இனி  "ஃப்னிக்ஸ் பறவை"யை    உதாரணிப்பதைவிட, ஜப்பானியனை" உதாரணிக்கலாம் மீண்டெழுவதற்கு.
---*---
மாற்றம் என்றவுடன் நம் தமிழ்நாட்டு தேர்தல் நிழலாடும். திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பளித்து கொண்டிருக்கிறார்கள் சில வருடங்களாக கேரளாவைப்போல். எனக்கென்னமோ இலையில் திமுகவின் இலவசங்கள் வந்து விழுந்தாலும் இலைக்கு கொஞ்சம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாகப் படுகிறது. இல்லையேல்   'தொங்களில்'  மாட்ட நேரலாம். நம்மக்களை கணிப்பது கடினமே!

கலைஞரின் சொந்த-குடும்பங்கள் வெர்சஸ் அம்மாவின் தத்து-குடும்பம் என்பதில் மக்கள் கொஞ்சமே குழம்பியிருக்கிறார்கள். முதல் குடும்ப(ங்க)த்தில் இரத்த உறவு உள்ளதால் கலைஞருக்குப்பின் தலையெடுக்க திமுகவால் முடியும். ஆனால் இந்த குடும்பத்தில் அதுயில்லையாகயால், தத்து-குடும்பம், எது மாட்டியிருந்தாலும், அம்மாவை சற்று சுயமாகவிட்டால் கட்சியும் பிழைக்கும் அவங்களும் கூடவே. இல்லையேல் அம்பேல்தான்.
---*---
தத்து-குடும்பம் என்றதும் 'மிடாஸ்' ஞாபகத்தில் வந்து ஒரு தண்ணி மேட்டரை எழுதவைக்கிறது. சில நாட்களுக்கு முன் கோரமங்களா ஸ்பென்சரில் நண்பருக்கு தண்ணி வாங்கப்போனோம். சத்தியமாக அவர் குடிக்கமட்டுமே... ஏனெனில் அப்போதுதான் என் தங்கமணி அருளியிருந்த என் கோட்டா முடிந்திருந்தது. போனால், அங்கு ஒரு ப்ரமோஷன் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞன் தன் கையிருந்த வட்டத்தாளில் ஏதோ ஒன்றை ஸ்பிரெயிட்டு வருகிறர்களிடம் நுகரச் சொல்ல, இன்னொருவர் அதை தன் செல்லில் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.


                    (கையிலும் முகத்திலும் ஸ்பிரேவோடு அவ்விளைஞன்)

என்னிடமும் ஒன்றை நீட்டினான் அந்த இளைஞன் ஸ்பிரெயிட்டு. நுகர, எலுமிச்சை வாசனையடித்தது. சரி, தண்ணியடிப்பவர்களுக்கான "வாய் புத்துணர்வூட்டான் (Mouth Freshner)" போலிருக்கிறது என்று, "என்ன மேக்?"... என்றேன். அவன் சொன்னான் "சார், இது ஸ்மர்ன் ஆஃப் வாட்கா. புது "லைம்" ஃப்ளேவர்... அடிச்சிங்கனா வாசனை வராது". நான் "அப்படியா?! பின்னயேன் தாள்ல அடிக்கிற... என் நாக்குல அடிக்க வேண்டியதுதானே?!!!" என்றேன் ஆவலுடன். மேலும்..."ஏன் இந்த போலீஸ் ஊதானில் மாட்டாதமாதிரி ஒரு சரக்க கண்டுபிடிக்க சொல்றதுதானே" என்றதற்கு "முதல்ல உங்களை காற்றில் ஊதச்சொல்லிதான் முகர்வார்கள். அப்பவே தப்பிக்கலாம் இதை அடித்திருந்தீர்களானால்" பதிலுரைத்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அந்த போட்டாவை என் நண்பரின் செல்லுக்கு "நீலபல்" தொழில்நுட்ப உதவியால் பிரதியெடுத்துக்கொண்டு "என் ப்ளாக்கில் எழுதுவேன், பரிசோதித்தப் பின்னர்" என்று கூறி அந்த சரக்கில் 'வ' இல்லையாதலால் வேறொன்றை எடுத்துக்கொண்டு, பில் கவுன்டர் நோக்கி நடந்தோம். பின்னாலே ஓடிவந்த அவ்விளைஞன் ஒரு வேண்டுகோளை விடுத்தான்.

அதைப்பார்க்குமுன் என் பரிசோதனைப்பற்றி...

பிறிதொரு நாளில் அந்த பரிசோதனையும் நடக்க வாய்ந்தது  நம் ஜாக்கியுடன். இரண்டுபேருமே உணர்ந்தோம்  சிப்பும்போது அதன் எதிர்த்தடிக்காத தன்மையும், பிறகு ஆல்கஹால் நாற்றம் எழாத குணத்தையும். வீட்டுக்கு சென்றால், ஒரு டெஸ்டிங்கும் இல்லை. ஆக... பரிசோதனை வெற்றி!. ஏதோ என்னால் முடிந்த தகவலைப் பகிர்ந்துள்ளேன். இனி நீங்களாச்சி ஸ்மர்ன் லைம்-ஆச்சி. ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் - "DRINK RESPONSIBLY - அதாவுது, சைட்டிஷ் எந்த வறுத்த பருப்பா இருந்தாலும், பொறுப்பா குடிங்க!"

இந்தயிடத்தில் ஜாக்கி- அவர்களுக்கு என் மனமுவர்ந்த வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன். உங்களுக்குதான் தெரியுமே எதுக்குனு.

மீண்டும் அந்த வேண்டுகோள் விடயம்... "சார், நான் காலேஜ் ஸ்டூடண்ட். இது பார்ட்டைம் வேலை. ப்ளீஸ்... ப்ளாக்குல போட்டோ போடும்போது என் உருவம் வராம பார்த்துக்குங்க" என்பதுதான் அது. அதிர்ந்தேன்... இந்த ஆல்கஹால் கம்பெனிகளுக்கு "PROMOTE RESPONSIBLY" என்று சொல்லவேண்டும்.

Thursday, March 10, 2011

சைலன்சர் சூடும், எரிச் சீகலும்... கடைசிப் பகுதி.

"Love means never having to say you're sorry."

"காதல் என்பதில் 'நீ வருந்துகிறாய்' என்று  சொல்லத்  தேவையில்லை" 

இதுதான் அந்நாவலின் உயிர்வசனம்.

அவனுக்கு தந்தையின் 'மேல்குடி' நடவடிக்கைமேல் வெறுப்பு. ஆனால் அவளோ காதலனின் வெறுப்பை மாற்றும் முயற்சியில் அவனின் கோபத்திற்கு உள்ளாகிறாள், ஒரு சமயம்.  அழுகையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அவளை, அவன் தேடுகிறான் பல இடங்களில். காணாமல் வீடு திரும்பினால்... வாசலில் அவள். உணர்ச்சிக் குவியலாய் அவன் சொல்வான் - "I'm sorry". அதற்கு அவள்  சொல்லும்  பதில்தான்  மேலுள்ள  வசனம்.

பிறிதோரிடத்தில் அதே வசனத்தை அவன் தந்தையிடம் சொல்வான்.

இந்த புத்தகத்தை, என் கேபி100-ன் பெட்ரோல் டாங்க் கவரில் துருத்தியப்படி வைத்து, நாங்கள் குடியிருந்த அடுக்குமாடி காம்பவுன்ட் கேட்டைத் தாண்டுகையில், மேல்தளத்து டாக்டர் மாமா அவர்கள், அதைப்பார்த்து அந்த தகவலை பகிர்ந்தார் - "இது படமா வந்ததே".

இவர்தான் என் அன்றைய "ஹாலிபாலி" மற்றும் imdb எல்லாம். அவரின் பரிந்துரையில் ஏகப்பட்ட க்ளாஸிக் ஆங்கில  படங்களை  தேடிப்  பார்த்துள்ளேன்.  க்ளின்ட் ஈஸ்ட்வுட்டின் (Clint Eastwood) கெளபாய்  தொகுப்புகள்  மற்றும்  டர்டி ஹாரிஸ், வார் படங்கள் - தி லாங்கஸ்ட் டே (ஸ்டார்  ஸ்டட்டட்  படமது),  'டோரா, டோரா, டோரா', வேர் ஈகல்ஸ் டேர்ஸ், எ ப்ரிட்ஜ் டூ ஃபார்... மற்றும் டெரன்ஸ் ஹில், பட் ஸ்பென்சர் (Terence Hill & Bud Spencer) நடித்த பல படங்கள் ஆகியவை அதில் அடங்கும்.

உடனே தேடத் தொடங்கினேன் லவ் ஸ்டோரி (Love Story) வீடியோ டேப்பை பல லைப்ரரிகளில். ஒரு கடையில் கிடைத்தது தூசிகள் அப்பி. ரூல்ட் (ruled)படமாக பார்த்தேன் அப்போது. வசனங்கள் தெரியுமாதலால் சப்டைடில் இல்லாமல் இருந்தது பிரச்சனையாக இல்லை. சென்ற வாரத்தில் மறுபடியும் பார்க்க ஒரு வாய்ப்பு சோனிபிக்ஸில். டைடிலைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை ரெட்வைனுடன் (நம்ம ஹெரிடெஜ்-2000 தாம்பா) டிவி முன் அமர்ந்தேன். சிப்சிப்பாக அனுபவித்தேன் இரண்டையும்.

அலிஸ் (Ali MacGraw ) ஜெனியாக, ரையான் 'ஓ' நில் ( Ryan O'Neal )ஆலிவர் பாரட் IV-ஆகவும் பாத்திரத்தில் இரண்டர கலந்திருந்தனர்.கதை முன்னரே சொன்னமாதிரி வழக்கமான காதல் தான். ஒரு பெரியயிடத்து பையன், ஒரு 'வொர்கிங் கிளாஸ்' குடும்பத்து பெண்ணுடன், காலெஜ் படித்திருக்கும்போது காதலில் விழுகிறான். அவன் தன் பரம்பரை பணக்காரத்தன வழிமுறைகளையும், அதை புகுத்த துடிக்கும் தன் தந்தையின் கண்டிப்பையும் வெறுப்பவன். அவள் துடுக்கானவள் (போன பகுதியின் உரையாடலை ஞாபகத்தில் கொணர்க), ஆனாலும் அவன் தன் தந்தையின் மேலுள்ள கோபத்தை போக்க முயற்சிக்கிறவள். அந்த கோபத்தைக் கண்டு, ஒரு தடவை, அவன் தன் 'சமூக எதிர்மறை நிகழ்நிலையை' (socially negative status) தான் உண்மையில் விரும்புகிறானா என்று அவனிடமே கேட்கிறவள்.

இவர்கள் காதலின்போது பல நிகழ்வுகள், பின்னர் நம் தமிழ்படங்களில் பலவகைகளில் எடுத்தாளப்பட்டவை. 'குஷி' யில் வரும், விஜய் தன் அம்மாவிடம் போனில் 'ஐ லவ் யூ, ப்ரியா(?)' என்று வைத்தபிறகு வரும் ஜோதிகாவின் கேள்விக்கணைகள் - ப்ரியா?.. யாரு? அம்மா... ஆமாம் நம்ம அம்மா... அதுஅப்படியே ஆனால் என்ன... ஆண்பெண் மாற்றிருப்பார்கள். அதில், அலிஸ் தன் அப்பாவிடம் " I luv u, Phil" என்ற பிறகுவரும். அதே குஷியில் வரும் படிக்கும்போது 'இடுப்ப பார்த்த'... அதில் "காலப் பார்த்த".

அலைபாயுதே-வில் வரும் தேடல் சீன், அதிலிருந்து தான். இவ்விடத்தில் "Francis Lai" யின் பிஜிஎம்-ஐ சொல்லவேண்டும். அலிஸ் இசைப்பள்ளி மாணவியாதலால் பிஜிஎம்-ல் நிறைய மற்ற இசைமேதைகளின் (Mozart, Bach...)  கோர்வைகளை  உபயோகித்திருப்பார்.  ரையான் அவளை அவளின் இசைப்பள்ளியில் ஒவ்வொரு அறையாக திறந்து  தேடும்போது பின்னனியிசையில் அவ்வறைகளிருந்து சேரும் வகுப்புஇசையும், கலவை அற்புதமானது. கீழே உள்ள தீமை கேட்டுப் பாருங்கள்...


நம் இசைஞானியின் ஒத்த கோர்வை; மனதை அள்ளுகிறது.

நாவல் தந்த தாக்கத்தை, அழகாக திரையில் அளித்திருந்தார்கள்.

imdb-யில் மேய்ந்த போது, கிடைத்த சில சுவரஸியங்கள்...
  • அலிஸ் அப்படத்தில் 24/25   வயது   பெண்ணாக நடித்தபோது,   வயது 31. ஆனால் மிகப்  பொருத்தம்  -  ஒரு  அமெரிக்க -  இத்தாலியன்   பாத்திரத்திற்கு. 
  • ரையான் நடித்த ஆலிவர் பாத்திரத்தை நடிக்க மறுத்தவர்களில் சிலர் - டக்ளஸும், ஜான் வாய்ட், ஜெஃப் ப்ரிட்ஜஸ்-ம்.
  •  முதலில் திரைக்கதை தான் எழுதப்பட்டது. படப்பிடிப்பில் இருக்கும்போது நாவலாகி, படம் வெளிவரும்முன் வெளிவந்து சக்கைபோடு போட்டது பெஸ்ட் செல்லராக.
  • Tommy Lee Jones - ன் முதல் படம் - ரையானின் ரூமேட்டாக.
அந்த அர்த்தராத்திரிலேயே படம் முடிந்தவுடன் பதிவாக எழுதிட துடித்தேன். ஏனோ முடியாமல், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னவளுக்கு மெல்லிய முத்தமிட்டு, பின் அணைத்தபடி நானும் தூங்கிப்போனேன்.


Monday, March 7, 2011

சைலன்சர் சூடும், எரிச் சீகலும்...தொடர்ச்சி

அவருக்கு நான் கொடுத்தது அரைமணி நேரங்கள் மட்டுமே. முடிந்தவரையில் பழையநிலைக்கு அதை திருப்பச் சொன்னேன். மறந்தும் வேலையின்போது சிரித்தறியாத அவர் தோராயமாக தலையசைத்தார்.  இப்பொழுது சைலன்சர்சூடு இன்னும் எரிச்சலைக் கூட்டியிருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தேன் சிவப்பு + சைன் தெரிகிறதா எங்கயாவது என்று. சற்றே தூரத்தில் தெரிந்தது ஒன்று, வெள்ளை பல்லிளித்த சுவரில் தொங்கியபடி.

கிட்டேநெருங்கியபோது, ஒரு பழைய கிராமத்து நாட்டுவைத்தியர் இடம்போல் காட்சியளித்ததால், தயங்கி போர்டை பரிசோதித்தேன். ஒரு ஆண்பால் பெயருக்கு பின் MBBS என்றுதான் போட்டிருந்தது. பர்சிலிருக்கும் பணத்துக்கும் தோதாக இருக்கும் என்ற சமாதானத்தோடு குனிந்துபடி உள்ளே நுழைந்தேன் ஆள்அரவமற்ற முன்னறையில். அட அட்லீஸ்ட் ஒரு சின்ன பையன்கூடவா இல்லை டோக்கன் போடுவதற்கு என்றெண்ணியவாறே, ஆடிய திரைச்சீலை வழியே அடுத்த அறையை எட்டாமல் பார்த்தேன். டாக்டர் சீட் காலியாகயிருந்தது (அப்ப நீங்க அப்ளை பண்ணவேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கக்கூடாது... நான் மெக் இன்ஜினியர்(மக்கு-யில்லை)). பேஷண்ட் சேரில் புடவைக்கட்டிய பெண்ணொருவர் அமர்ந்திருந்தார், ஏதோவொரு புத்தகத்தைப் படித்தபடி.

'யெஸ், கம்-இன்' - பியானோவின் இசை. ஏனோ சிறு படப்படப்பு கூடியது; திரையை விலக்கி உள்ளே நுழைந்து அவரைப் பார்த்தேன். வெகுதிருத்தமாக, பளிச்சென்று, நேற்றுதான் கல்லூரி முடித்த தோற்றத்தில் இருந்தார் அந்தப் பெண். இந்த எழுத்தாளர்கள் எப்படித்தான் பெண்களின் அழகை வர்ணிக்கிறார்களோ...?!!! நானும் இங்கே முயன்றேன்... முடியவில்லை. எல்லாபக்கத்திலிருந்தும் தாக்கும் அழகில் டீடெய்ல் பார்ப்பதுக் கடினம். அந்த தாக்கத்தின் வெம்மை மட்டுமே தெரிந்தது எனக்கு அப்போது..., இப்போதும். மிகலேசான புருவநெரிப்பில் தெரிந்த 'என்ன?' என்ற கேள்வியில், அவர் டாக்டர் தானா என்கிற ஆராய்ச்சிக்கு செல்லாமல் (போர்டில் ஆண்பெயர் மட்டும்தான் பார்த்தேன்), சொன்னேன் என் பைக் சாகசத்தை. என்னை உட்கார வைத்து, கைபடாமல் பார்வையிட்டு, கொழகொழவென்றிருந்த ஏதோ லோஷனை அதன்மேல் பரவவிட்டார். ப்ரிஸ்கிருப்ஷன் தாளில் எதோ வரைந்தார். 'இந்த டிடி இன்ஜெக்‌ஷனை வேறு எங்கியாவதுகூட போட்டுக்கொள்ளுங்கள்' என்றிசைத்தார் மறுபடியும்.  மனதில் 'மாட்டேனே'  கூரியவாறே,  வாங்கிவந்து  விடுகிறேனென்று  வெளியில்  விரைந்து சென்று திரும்பினேன் பாட்டிலுடன். அவர் சிரிஞ்சை ரெடியிடுகையில், மேஜையில் மூடியிருந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்வையிட்டேன்.

'சீகல்' தான் முதலில் கண்ணில்பட்டது. நம்ம 'ஸ்டீவன் சீகல்' பற்றியதா... தோன்றிய எண்ணத்தோடு நீல அட்டை முழுவதையும் பார்த்தேன். 'டாக்டர்ஸ்' அதற்கு கீழே 'எரிச் சீகல் (Erich Segal)' என்றிருந்தது. ஒரு டாக்டர் 'மருத்துவ' சம்பந்தமா படிக்கலாம்... இவங்க ஏன் 'மருத்துவர்' சம்பந்தமா படிக்கிறாங்க? - குழப்பத்தோடு வெளியேறினேன், விடைபெற்று அன்று.

பின்னொருநாளில், ஒரு நடைபாதைக்கடையில் எரிச் சீகலின் 'லவ் ஸ்டோரி'  கண்ணில்பட்டது. மெல்லியப் புத்தகம் - படிக்க தூண்டும்வகையில். அந்த பெண்டாக்டரின் நினைவுவர, அப்புத்தகத்தை வாங்கினேன். மேற்சொன்ன நிகழ்வுகள், ஒரு புத்தகமும் அல்லது ஒரு எழுத்தாளரும் நமக்கு எப்படியெல்லாம் அறிமுகமாகக்கூடும் என்பதை சொல்லவே. படிக்கலானேன்...ஒரு மெல்லிய காதல் கதைதான். ஆனால் ஒரு துள்ளலோடும் துடிப்போடும் அதைக் கையாண்டவிதத்தால் மனதை ஆக்கிரமித்தது சட்டென்று. 1970-ல் எழுதப்பட்ட நாவலது. கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுகள் தாண்டியும் அதன் புத்துணர்ச்சி குறையாமலிருந்ததற்கு, தீம் தான் காரணமாயிருந்திருக்க வேண்டும் - காதல். படித்துப்பாருங்கள்,  இன்னும் படித்திராவிட்டால் - அதைக் க்ளாஸிக் வரிசையில் வைப்பீர்கள்.

மனைவி மரணப்படுக்கையிலிருக்க, கணவன் நினைத்துப் பார்க்கும் ஃப்ளாஷ்பேக்-காக விரியும் எள்ளலும்,  காதலும்,  மோதலும்,  மற்ற  உணர்ச்சிகுவியுலுமான நிகழ்வுகள். வசனங்களே அந்த நாவலின் பலம். இப்படித்தான் ஆரம்பிக்கிறது அவர்களுக்கிடையேயான ஒரு உரையாடல்.

பெண்: "உன்னைப் பார்த்தால் ஒரு முட்டாள்பணக்காரன் போலிருக்கிறது".
ஆண்: "நல்லது... ஆனால் நான் ஏன் ஒரு சமர்த்துஏழையாக இருக்கக்கூடாது?"  
பெண்: "நான்தான் ஒரு சமர்த்துஏழை".
ஆண்: "எது உன்னை சமர்த்தாக்கியது?"
பெண்: "ஏனெனில் நான் உன்னுடன் காபியருந்திருக்கவில்லையே".
ஆண்: ஓஹ்... ஆனால் நான் இன்னும் உன்னை காபியருந்த அழைக்கவில்லையே". 
பெண்: "அதுதான்... நீ ஒரு முட்டாளென்று காட்டிக்கொடுத்தது."

தொடர்வேன்...


Saturday, March 5, 2011

சைலன்சர் சூடும், எரிச் சீகலும்...

கேபி-100-ல் பறந்துக் கொண்டிருந்தேன், பின்னால் என் நண்பருடன். அலுவலகம்விட்டு, சனி மாலையில்  வீடு  திரும்பலாதலால் உற்சாகம் பொங்கியது. அதுவேறில்லாமல் பைக் புதியது எனக்கு. அலுவலகம் திருவொற்றியூரிலும்,  வீடு   ஜாபர்கான்பேட்லும் இருந்த நேரங்கள் அப்போது. தொலைவு சுமார் 25கிமீ அவனிடையில். எனவே அலுவலக வண்டியை தவறவிடும்போதும், வாரயிறுதியான சனிக்கிழமைகளில் மட்டுமே பைக் பயணம்.

கண்டெய்னர் லாரிகளும், பல்லவன்களும், கார்களும் போட்டியிடும் ராயபுர மெயின்ரோடில் என் கருஞ்சிறுத்தையை விரட்டி ஆட்டோக்களையும், மற்ற சகவண்டிகளையும், இடையில்  புகுந்து  பின்னுக்கு  தள்ளிக்கொண்டிருந்தேன்    வெற்றிகரமாக,  அந்த பயங்கரம் நடந்தேறும் வரை.

காசிமேட்டை நெருங்கும்போது, என் நேரெதிரே ஒரு  ஆட்டோ ஊர்ந்துக்கொண்டிருந்தது,  என் வலதுப்பக்கத்தில் ஒரு 800.  800-ன் வேகத்தையும், அவ்வண்டிகளுக்கிடையே உருவாகப்போகும்  இடைவெளியை ஒருமாதிரி கணக்கிட்டு, ஒரு கூர்மையான வெட்டெடுப்போம் என்று ஆக்ஸிலேட்டரை  திருகினேன்  மேலும். அம்மாருதியோட்டியும் அதே (அவர் காரின்)  ஆக்ஸிலேட்டரை  மெதித்தார்போலும், இருவரும் ஒரேநேரத்தில் வேகம் பிடித்ததின் விளைவாக இடைவெளிக் குறைந்து, ஆட்டோவின் பின்பக்கமா அல்லது 800-ன் அடிப்பக்கமா - எதில் சரணடைவது உசிதமென்று அதே வேகத்தில் கணக்கிட்டு, சைடுபாரால் ஆட்டோவின் பின்புறத்தை அழுத்தமாக முத்தமிட்டு,   பெளதிகத்தின் சிலபல விதிகளுகெற்ப்ப  பைக்கிலுருந்து  விடுபட்டு, நிஜமாகவே பறந்து, ஆட்டோவின்   டாப்பை   பருந்துப்பார்வையால் லுக்கிட்டு, சாலையில் லேண்டானேன் சுமார் மூன்றுநான்கு கரணங்களுக்குப்பின்.

தலையில் ஈரம் பிசுபிசுத்தது. தொட்டுப்பார்த்தேன் - வியார்வை! திரும்பி பைக்கை நோக்கி நடந்தேன்.  தன்னிருபுறங்களிலும் 800-டும், ஆட்டோவும் சட்டென்று நின்றிருக்க, கவிழ்ந்திருந்த பைக்கில் விடாப்பிடியாக அமர்ந்திருந்தார் என் நண்பர், எதிர்பார்த்தது நடந்தேவிட்டாதா என்று விழித்தப்படி.   மாருதியோட்டியும் நானும் பரஸ்பரம் கும்பிட்டு, சேர ஆரம்பித்த கூட்டத்திலிருந்து அவரை அனுப்பிவைத்தேன். ஆட்டோக்காரரையும் ஒன்றிரண்டு நூறுகளில் அடக்கி, அருகில் கடை வைத்திருந்த மெக்கானிக்கின் உதவியுடன் சிறுத்தையின் ஓடும் நிலையை உறுதியிட்டு, தொங்கும் சைடுபாரும், இன்டிகேட்டருடன் மற்றும் சில உடைந்த பாகங்களுடன், அதைக் கிளப்பி உட்கார்ந்து,  உலுக்கிய உடம்புடனிருந்த  நண்பரை  ஏறிட்டுப்  பார்த்தேன். கூட்டத்தின் நடுவே தன்னுடைய மாரல்சப்போர்ட் கொடுக்கும்தன்மையை காப்பற்ற, என் நடுங்கும் தோளை அவரின் நடுங்கும் விரல்களால் பற்றியப் படி, ஏறி உட்கார்ந்தார்.

பின்னர், தோளில் அவர் விரல்கள் கொடுக்கும் திடீர்திடீர் அழுத்தங்களுக்கு ஏற்ப பைக்கை மட்டுப்படுத்தி ஓட்டி, பாரிஸில் அவரை ட்ராப் செய்தேன். இடையில் ஞாபகத்தில் வந்திருக்கும் செய்யாத நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, ஒரு நன்றி(?!)கூட சொல்லமறந்து, விட்டால்போதுமென்று என்னைவிட்டகன்றார். அவர் அகன்றப்பிறகு, இறங்கி பைக்கை நோட்டமிட்டு அதன் சேதத்தையும், என் சேதத்தையும் அளந்தேன். காலில் முட்டிக்கு கீழே குதிகால்பாதமளவு தோல் கருகியிருந்தது - சைலன்சர் சூடு! எரிச்சல் புத்தியில் ஏற, இப்படியே வீடுதிரும்பினால் பெற்றவர்கள் பதறி சிறுத்தையை சீஸ் செய்துவிடுவார்கள் என்பது திண்ணமாதலால், திருத்தங்கள் அவசியமென உணர்ந்து, அரங்கநாதன் சப்வே எதிரிலிருந்த என் ஆஸ்தான கேபி-மெக்கானிக்கிடம் பைக்கை  ஓட்டிவந்து சேர்ப்பித்தேன்.

தொடர்வேன்...
Friday, March 4, 2011

ரூட் மேப் 3

ரூட் மேப்...
ரூட் மேப் 2 - இவைகளைப் படித்துபின் தொடரவும்.

பந்தயப்புறா.

பிறகு பல -மெர்க்குரிப்பூக்கள், இரும்புகுதிரைகள் (கவனியுங்கள் - 'க்' இல்லை), அப்பா, தாயுமானவன், சிநேகமுள்ள சிங்கம், அகல்யா, கடலோர முதலைகள், கிருஷ்ண அர்ஜுனன்,முன்கதை சுருக்கம், இனிது இனிது காதல் இனிது...  இன்னும் எவ்வளவோ. என்ன எழுத்து இது. கதையினூடே வாழ்வு. வாழ்வினூடே விசாரணைகள். விசாரணைகளின்-ஊடே குழப்பங்களுக்கான தீர்வு முன்வைப்பு. படித்த சிலநாட்களுக்கு அனைத்துமே தெளிவு. அதனால் இதுவோ? இதனால் அதுவோ? என்கின்றமாதிரியான எந்த நிகழ்வுக்கும் எந்த எண்ணத்திற்கும் அடிவேர் தேடும் முயற்சி. முன்னமே இருந்த கேள்விகள், தேடல்கள் மற்றும் அவைகள் தூண்டுகிற மூன்றாம்பார்வைகள் தான். கூர்பட்டன (வாடை கொஞ்சம் தூக்கலோ).

என் அந்தக் காலக்கட்டங்கள் விடுதியில் தங்க நேர்ந்தவை. எனக்கான நேரங்கள் நிறைய இருந்தன. பலவற்றைத் தேடிப் படித்தேன். சில என்னைத் தேடி கையில் விழுந்தன.படித்தேன், படித்ததை அந்த வயதுக்குரிய செயல்பாடுகளில் புகுத்திப் பார்க்க ஆரம்பித்தேன். பல நல்விளைவுகளும், சொற்ப பக்கவிளைவுகளும் கிடைத்தன.

படித்தவைகளில் அதிகம் பித்துபிடிக்க வைத்தது பாலகுமாரன் எழுத்துக்கள். மேற்சொன்னமாதிரி படிக்கின்ற சில நாட்களுக்கு, தெளிந்த நீரோடையில் அடிமண் தெரியுமே அந்தப் பார்வைத் துல்லியம். எதிலும் பின்புலம் பார்க்க முடிந்தது. அட... இது சகப்பசங்களுக்கு பார்க்க தெரியாதே... என்றமாதிரியான மைல்ட் மதமதப்பு. நடவடிக்கைகளிலும், எதிர் வினைகளிலும் ஒரு மேல்மட்டத்தனம். இதெல்லாம் கொஞ்ச நாட்கள்தான்...பிறகு பழைய குழப்பங்களுடனான வாழ்வுநகர்த்தல். பின் அடுத்த புத்தகம்... மீண்டும் பிரச்சனைகளை ஆராய்ந்து, துவைத்து, அலசி, பின்னர் காயப்போட்டு தொங்கவிடல், என்னுடையதையும், சகப்பசங்களைதையும்.

ஒரு மாதிரியான நாட்டாமப் பதவி கிடைத்தது, என்னைவிட பலவீனமானவர்களிடமிருந்து. பார்வையில் சற்று 'தள்ளிநிர்த்தல் (அ) ஒட்டாமை " தெரிந்ததால், மற்ற வயதினர்களுடன் சிநேகமும் கிடைத்தது. அதுவே சிலயிடங்களில் 'பிணமுகம்' பெயெரெடுத்துக்கொடுத்தது கூட.

அவரின் மூலம் சித்தர் பாடல்கள், பகவத்கீதையின் சில ஸ்லோகங்கள், ஓஷோ, ஜிகே என தளம் விரிந்தது. கண்ணதாசனும் வைரமுத்துவும் அதில் சேர்ந்தனர். யாரையும் நிராகரிக்கவில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சுவையில். புத்தகங்கள் நெருக்கமாயின. இதுவும் ஒஷோ சொன்னதுதான்... புத்தகங்கள் நம்மிடம் நெருங்குவது சுலபம். ஏனெனில் அவையுடன் நம் 'ஈகோ'க்கள் அடிப்படுவதில்லை, தூண்டப்படுவதும் குறைவு. பிடித்திருந்தால் கையில், இல்லையேல் தரையில். எழுத்தையும் எழுத்தாளனையும் தள்ளி வைப்பது எளிது. அதேநேரம், ஒத்திருந்தால் கொண்டாடவேண்டியதுதான்; அதனிடம் விழுவதும் மிக எளியது.

இப்போது இந்த வலைப்பூக்கள் வந்த பின்னர் - இது இன்னும் கண்கூடு. என்ன... பிடிக்காவிட்டால் (அ) தன் ஈகோ தூண்டப்பட்டால், தரையில் போடாமல் எழுதியவன் தலையை போடுகிறார்கள். சமயத்தில் மூக்கில் இரத்தம் வேறு. அப்புறம்... ம்ம்ம்... சரி இதை வேறொரு தனிப்பதிவில் தொடர்வோம் (ஆம், நான் அப்படித்தான்... பின் உங்களை மறுபடி வர வைக்கனுமே).

'புல் தானகவே வளர்கிறது' - ஒஷோவின் புத்தகம். மேலும் என்னை புரட்டிப்போட்டது. எதுவும் இயல்பே - என்பது புத்தியில் சம்மணமிட்டுயமர்ந்தது.