Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Saturday, February 23, 2013

விஸ்வரூபமும் அகஸ்தியரும்…

“விக்ரம்” படம் ஜாபர்கான்பேட்டை காசியில் (காசி ஏசி என்றுதான் சொல்வோம்) வெளியானபோது, குடும்பத்தோடு போய் வரிசையில் நின்றிருந்தோம் நுழைவுத்தாள் வாங்க. எட்டோ ஏழோ படித்துக்கொண்டிருந்த காலகட்டமது. வெளியே பெரிய பெரிய கட்டவுட்டில் காந்தக் கண்களோடு… டிம்பளை-ச் சொல்லவில்லை… கமல் தான். என்னா… கண்ணுடா (உத – மன்னிக்க)!!! கூடவே அந்த ராக்கெட்டும். தொங்கிக்கொண்டிருந்த வண்ண வண்ண பேப்பர் ஸ்டார்களையும், கொடிகளையும் எண்ணி… நம்பாளுக்குத்தான் அதிகமோ!?!?!! என்று மனதை சந்தோஷப்படித்திக் கொண்டேநின்றிருந்தேன் காலை மாற்றி மாற்றி.

வரிசையில் கவுன்டரை நெருங்க நெருங்க… அந்த பிங்க் மற்றும் வெளிரிய மஞ்சள் டிக்கட்கட்டும் குறைந்துக்கொண்டே வந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் காத்திருப்பு அது. ஆம், முதல்வரிசை ரசிகர்களெல்லாம் பார்த்து முடித்து, ஆர்ப்பாட்டமெல்லாம் ஓய்ந்த வேளைகளில்தான் குடும்ப குடும்பமாக படம் பார்க்கச்செல்லும் மத்தியவர்க்கத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். டிக்கெட்கள் கைகளில். தியேட்டரின் முன்படிகளில் அமர்ந்து, தேதியையும் நேரத்தையும் சரிப்பார்த்துக் கொண்டே கண்ணாடிக் கதவு திறக்குமா அல்லது தியேட்டர் இடிந்துகிடிந்து விழுந்திடுமா படம் பார்க்கும் முன்னர் என்று பகிரென்றிருந்தேன். திடீரென்று ஒரு சந்தேகம்... அப்பாவின் கைகளுக்கு மாறியிருந்த டிக்கட்டை பிடுங்கி படத்தின் பெயரை பார்த்தேன். விக்ரம். சரிதான். அப்பாவின் “அடேய்…” அப்போது காதுகளில் விழவில்லை.

பாதிப் படம் முடிந்தது; சீட்டைவிட்டு நகரவில்லை. ப்ளாஸ்டராப்பாரிசில் செய்திருந்த உட்சுவர் புடைப்புகளின் மேல் விழுந்திருந்த வெளிச்சபட்டைகளை, படம் அதுவரை கொடுத்த ஒருவித படப்படப்போடு கண்களால் மேய்ந்தபடி சீட்டில் சீசாடினேன். இடைவேளை ஒருவழியாக முடிந்து மீதிப்படமும் முடிந்த பின்னர்தான் ஏசியின் குளிர் உணர்ந்தது எனக்கு, அன்று.

ஏறக்குறைய அதேவித படப்படப்போடு சென்ற 28-செவ்வாயன்று மீண்டும் ஒரு கமல் படம். பெங்களூர் பன்னெர்கட்டா கோபாலன் மாலில் விஸ்வரூபம், மாலைக் காட்சி.

அதற்கு முன் ஞாயிறன்றுதான் ஊர்வசியில் காலைக் காட்சிக்கு ஆன்லைனில் புக்செய்து, குடும்பத்தோடு சென்று, அடித்துபிடித்து சாலையோரத்தில் அதுவும் நெரிசலான சிக்னல் அருகே காரை பார்க் செய்து, மனைவியாரையும் பசங்களையும் வண்டியிலேயே விட்டு செக் செய்ய சென்றால்… போலிஸாரின் மத்தியில் கேட்டுக்கு உள்ளேயிருந்தபடி “ஷோ கேன்சல்… ஆன்லைனா? பணம் டூ வீக்ஸ்ல வாபஸ் ஆயிடும்.” என்று அந்த இளைஞன் பதில்சொன்னதைக் கேட்டு, உயரே பறந்திருந்த பலூனில் கமலைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு பின் வீடுதிரும்பியிருந்தேன்.

பெங்களூரில் உறுதி 27-லிருந்து என்றறிந்தபின்னர்தான் புக் செய்திருந்தேன் என்றாலும்… மாலின் வெளியே வெறிச்சோடி ஒன்றிரண்டு காக்கிச் சட்டைகள் தென்பட்டதால், உள்ளுக்குள் காரில் நுழையும்போது வாசல்காப்போனிடம் “விஸ்வரூபம் ஜானேகியே க்கியா?” ஒரு கேள்வி… அவன் ஹிந்திவாலா அல்லவா. பதிலே சொல்லாமல் யோசித்தபடியே இருந்தவனைக் கடந்து சென்றேன். மனைவிடம் திரும்பி “என்னம்மா இது… இப்படி யோசிக்கிறான்… இன்னைக்கும் இல்லையோ?” என்றபோது, “ஹையோ அப்பா… அவன் நீங்க கேட்டது ஹிந்தியிலியான்னு யோசிக்கிறான்… நத்திங் எல்ஸ்” என்றாள் என் மகள் பின்சீட்டில் இருந்தபடி. ம்ஹும், தமிழனா இருந்து இதைக்கூட தாங்கலைனா எப்படி. பார்க்கிட்டு லிஃப்டில் ஏறும்போது அதன் இயக்குனரிடம் “விஸ்வரூபம்?” என்றதற்கு ஒரு ஆறுதலான தலையசைப்பு அவரிடமிருந்து. நம்மாதிரி பலர்பேர் பதட்டத்தோடு கேட்டுருப்பார்கள் போல.

கவுன்டரை அணுகி மெசெஜை காண்பித்து டிக்கெட்டை ப்ரிண்டிட்டு கையில் வாங்கினேன். பிறகுதான், பின்னால் வந்தார்களா என்று தேடி மனைவியாரையும் பசங்களையும் பார்த்து டிக்கெட்களை அசைத்தேன். மனைவியின் “அடேய்” என்ற பார்வையை இப்போது கண்டுகொள்ளவில்லை. டிடெக்டர் வாசலைக் கடந்து, செக்யூரிட்டி “அதை” தவிர மிச்சசொச்ச இடத்தையெல்லாம் தடவி என்னை உள்ளேவிட்ட போது முதல் நம்பிக்கை. “அதை” ன்னு சொன்னது தலையை.

நெ.1 திரையின் வாசலின்மேல் இருந்த நீள்செவ்வக பெட்டி, சிவப்பு புள்ளிகளால் “VISHWAROOPAM (TAMIL) SHOW:6.30PM” என்று ஓட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு அடுத்த நம்பிக்கை. உள்ளே சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்… வெளியே காத்திருந்த அந்த நேரத்தில்தான் மேல் சொன்ன “விக்ரம்” பதட்டம் ஞாபகத்தில் வந்தது. நடுவில் பல படங்கள் வந்து, பார்த்து சென்றாலும்… அது ஏனோ நினைவில் தங்கி இதனுடன் ஒப்பிடவைத்தது.

தொடரும்…