Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Saturday, March 5, 2011

சைலன்சர் சூடும், எரிச் சீகலும்...

கேபி-100-ல் பறந்துக் கொண்டிருந்தேன், பின்னால் என் நண்பருடன். அலுவலகம்விட்டு, சனி மாலையில்  வீடு  திரும்பலாதலால் உற்சாகம் பொங்கியது. அதுவேறில்லாமல் பைக் புதியது எனக்கு. அலுவலகம் திருவொற்றியூரிலும்,  வீடு   ஜாபர்கான்பேட்லும் இருந்த நேரங்கள் அப்போது. தொலைவு சுமார் 25கிமீ அவனிடையில். எனவே அலுவலக வண்டியை தவறவிடும்போதும், வாரயிறுதியான சனிக்கிழமைகளில் மட்டுமே பைக் பயணம்.

கண்டெய்னர் லாரிகளும், பல்லவன்களும், கார்களும் போட்டியிடும் ராயபுர மெயின்ரோடில் என் கருஞ்சிறுத்தையை விரட்டி ஆட்டோக்களையும், மற்ற சகவண்டிகளையும், இடையில்  புகுந்து  பின்னுக்கு  தள்ளிக்கொண்டிருந்தேன்    வெற்றிகரமாக,  அந்த பயங்கரம் நடந்தேறும் வரை.

காசிமேட்டை நெருங்கும்போது, என் நேரெதிரே ஒரு  ஆட்டோ ஊர்ந்துக்கொண்டிருந்தது,  என் வலதுப்பக்கத்தில் ஒரு 800.  800-ன் வேகத்தையும், அவ்வண்டிகளுக்கிடையே உருவாகப்போகும்  இடைவெளியை ஒருமாதிரி கணக்கிட்டு, ஒரு கூர்மையான வெட்டெடுப்போம் என்று ஆக்ஸிலேட்டரை  திருகினேன்  மேலும். அம்மாருதியோட்டியும் அதே (அவர் காரின்)  ஆக்ஸிலேட்டரை  மெதித்தார்போலும், இருவரும் ஒரேநேரத்தில் வேகம் பிடித்ததின் விளைவாக இடைவெளிக் குறைந்து, ஆட்டோவின் பின்பக்கமா அல்லது 800-ன் அடிப்பக்கமா - எதில் சரணடைவது உசிதமென்று அதே வேகத்தில் கணக்கிட்டு, சைடுபாரால் ஆட்டோவின் பின்புறத்தை அழுத்தமாக முத்தமிட்டு,   பெளதிகத்தின் சிலபல விதிகளுகெற்ப்ப  பைக்கிலுருந்து  விடுபட்டு, நிஜமாகவே பறந்து, ஆட்டோவின்   டாப்பை   பருந்துப்பார்வையால் லுக்கிட்டு, சாலையில் லேண்டானேன் சுமார் மூன்றுநான்கு கரணங்களுக்குப்பின்.

தலையில் ஈரம் பிசுபிசுத்தது. தொட்டுப்பார்த்தேன் - வியார்வை! திரும்பி பைக்கை நோக்கி நடந்தேன்.  தன்னிருபுறங்களிலும் 800-டும், ஆட்டோவும் சட்டென்று நின்றிருக்க, கவிழ்ந்திருந்த பைக்கில் விடாப்பிடியாக அமர்ந்திருந்தார் என் நண்பர், எதிர்பார்த்தது நடந்தேவிட்டாதா என்று விழித்தப்படி.   மாருதியோட்டியும் நானும் பரஸ்பரம் கும்பிட்டு, சேர ஆரம்பித்த கூட்டத்திலிருந்து அவரை அனுப்பிவைத்தேன். ஆட்டோக்காரரையும் ஒன்றிரண்டு நூறுகளில் அடக்கி, அருகில் கடை வைத்திருந்த மெக்கானிக்கின் உதவியுடன் சிறுத்தையின் ஓடும் நிலையை உறுதியிட்டு, தொங்கும் சைடுபாரும், இன்டிகேட்டருடன் மற்றும் சில உடைந்த பாகங்களுடன், அதைக் கிளப்பி உட்கார்ந்து,  உலுக்கிய உடம்புடனிருந்த  நண்பரை  ஏறிட்டுப்  பார்த்தேன். கூட்டத்தின் நடுவே தன்னுடைய மாரல்சப்போர்ட் கொடுக்கும்தன்மையை காப்பற்ற, என் நடுங்கும் தோளை அவரின் நடுங்கும் விரல்களால் பற்றியப் படி, ஏறி உட்கார்ந்தார்.

பின்னர், தோளில் அவர் விரல்கள் கொடுக்கும் திடீர்திடீர் அழுத்தங்களுக்கு ஏற்ப பைக்கை மட்டுப்படுத்தி ஓட்டி, பாரிஸில் அவரை ட்ராப் செய்தேன். இடையில் ஞாபகத்தில் வந்திருக்கும் செய்யாத நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, ஒரு நன்றி(?!)கூட சொல்லமறந்து, விட்டால்போதுமென்று என்னைவிட்டகன்றார். அவர் அகன்றப்பிறகு, இறங்கி பைக்கை நோட்டமிட்டு அதன் சேதத்தையும், என் சேதத்தையும் அளந்தேன். காலில் முட்டிக்கு கீழே குதிகால்பாதமளவு தோல் கருகியிருந்தது - சைலன்சர் சூடு! எரிச்சல் புத்தியில் ஏற, இப்படியே வீடுதிரும்பினால் பெற்றவர்கள் பதறி சிறுத்தையை சீஸ் செய்துவிடுவார்கள் என்பது திண்ணமாதலால், திருத்தங்கள் அவசியமென உணர்ந்து, அரங்கநாதன் சப்வே எதிரிலிருந்த என் ஆஸ்தான கேபி-மெக்கானிக்கிடம் பைக்கை  ஓட்டிவந்து சேர்ப்பித்தேன்.

தொடர்வேன்...








No comments:

Post a Comment