Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Thursday, August 15, 2013

எல்லாம் John Malkovich மயம்!!!

நேற்று காலை சிகாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் பயணம். அதிகாலை 2:30க்கு எழுந்து கிளம்பியதால், சீட்டில் பெல்ட்டை இறுக்கி , இடுப்பை சிறையிட்டபின், கண்களை மூடி, டேக்ஆஃப்பிற்கு காத்திருந்தேன். விமானம் ஜிவ்வென்று மேலெழும்பும் லயத்தில் எனக்கு தூக்கம் தூக்கும் எப்போதும்.

சற்று நேரம்தான் அந்த கண்ணயர்வு. "எனிதிங் டு ட்ரிங்க்?" குரல் கேட்டு... எப்போதும்போல் "டொமெட்டோ ஜூஸ், கோக், டாக்டர் பெப்பர், ஸ்பிரிட், ஜஸ்ட் வாட்டர்.." என்று மனதுக்குள் குழம்பி "ப்ளாக் காபி ப்ளீஸ்" என்றேன் அவளிடம்... இல்லை... அவனிடம். இந்த "யுஎஸ் ஏர்வேஸ்" நம்ப "ஏர் இண்டியா" போல. வந்ததும் ஒரு சிப் வாயில் வைத்தபிறகுதான் "அடடா தூங்க நினைத்தோமே... இப்பபோய் காபியா?" என்று நொந்துகொண்டே கப்பை முடித்தேன்.

இனி வேலைதான் என்று தெளிந்து, மடிபம்பரத்தை திறந்து, பிறகு செய்யவேண்டிய ப்ரசென்டேஷனை அவ்வப்போது சரிசெய்துக்கொண்டே முட்டைஜன்னலின் வழியே... மேக அடுக்குகளின் இடையே தெரியும் பஞ்சுப்பொதிகைகளின் பலவித வடிவங்களையும், அதனூடே விமானம் இன்னும் மேலெழும்ப... கீழே தெரியும் அவைகளின் பல படிமங்களையும் ரசித்தவாறேயிருந்தேன்.

அடுத்த அரைமணியில் லாண்ட்-ஆக வேண்டியஆரஞ்சு கவுண்டி வரயிருந்ததால், இப்போது பஞ்சுப்பொதிகைகளின் கீழடுக்கின்மேல் உயரம் இறங்கியிருந்தது. மலைகள், காடுகள்,ஆறுகள், ஏரிகள் மற்றும் அவற்றினூடே ஒடும் பாதைகள் என காட்சிகள் விரிந்தன... அவற்றை துடைத்தவாறே மேகங்களும் சென்றன அங்குமிங்கும்.

என்னுள் இருக்கும் கவிஞனை இப்போது உசிப்பி ஏதாவுது எண்டர் வரிகளைப் போடலாம்தான். ஆனால் அப்போது அந்த காட்சிகள், த்வைதம் அத்வைதமாகி... நானாகி போயிருந்தன.

 'ரோஜா'ன்னா... 'ரோஜா'ன்னா... 'ரோஜா'தானே...(A Rose is a Rose is a Rose!).

விவரித்தால் வார்த்தைகளாகத்தான் மிஞ்சும். வீண்.

சில கணங்கள் அப்படி வாய்க்கும். இறந்த, எதிர் காலங்களில்லாமல்.. அவை நிகழ்ந்தவண்ணம் இருக்கும். லயிப்பவன், லயிப்பதை கவனிப்பவன் என்று எவனும் இல்லாமல் இருக்கும் கணங்கள் அவை. காமத்தில், இராஜ போதையில், த்யானத்தில்... சிலநேரங்களில் கிடைக்கும் கணங்களாக.

Being John Malkovich - ல் ஜான் மால்கோவிச்சிற்கு கிடைக்கும் அந்த நேரங்கள்...

இங்கு ஒரு சானலில் இத்திரைப்படம் பார்க்க கிடைத்தது. வருடம் 1999-ல் வெளியானப் படம் இது. ஜான் க்யுசாக்(John Cusack) ஒரு Puppeteer. பொம்மைகளை கயிற்றால் ஆட்டுவிக்கும் ஒரு பொம்மலாட்ட கலைஞன். அங்கீகாரத்திற்கு போராடுபவன். அவன் தற்செயலாக, தான் புதியதாக வேலைக்கு சேர்ந்த, ஏழரை (?!) மாடியில் இருக்கும் அந்த கம்பனியில்… ஒரு விண்டோ ஏசி அளவில் உள்ள ஒரு portal-யை கண்டுபிடிக்கிறான். அது வலைவாசல் இல்லை, ஒரு தலைவாசல்... ஆம்...

அது நடிகர் ஜான் மால்கோவிச்சின் தலைக்குச் செல்லும் நுழைவாயில்.

அதில் நுழைந்தவர்கள் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு அந்த நடிகனின் கண்களின் வழியே, அவனது வாழ்க்கையை வாழலாம். பிறகு வேறெங்கோ ஒரு ஃப்ரிவேயின் பக்கமாக அந்தரத்தில் உள்ள வெளிவாசல் மூலம் விழுந்து வெளியேரலாம். இதை வைத்து அவனும், அவனுடன் வேலைப் பார்க்கும் பெண் Catherine Keener -மாக சேர்ந்து ஒரு ட்ரிப்பிற்கு 200 டாலர் என பணம் பண்ண ஆரம்பிக்கிறார்கள்.

கேதரினுக்கும், ஜான் க்யுசாக் மனைவிக்கும் (Cameron Diaz) மால்கோவிச் மூலம் நடக்கும் ஒரு கில்மா விவாகரத்தால், க்யுசாக் மால்கோவிச்சை தான் தலையிருக்கும் நேரம் ஆட்டுவிக்க முடியும் என்று அறியவருகிறான். 

மால்கோவிச்சிற்கும் தன்னை யாரோ இயக்குகிறார்கள் என புரியவருகிறது.
பின்வரும் காட்சிகளில் அந்த தலைவாசலை கண்டுபிடித்து, உள்ளே நுழைய...என்னதான் நடக்கும் என்று ஆவலாய் பார்த்தால்...


முதலில் அவனது கைகளால் சாப்பிட்டுகொண்டிருப்பதை காண்கிறான்... தலையை நிமிர்த்தினால் எதிரே திரண்ட மார்புடன்... மால்கோவிச். பெண்ணின் உடலில் அவனது தலை... சுற்றும்முற்றும் பார்க்க... இப்போது இந்த பதிவின் தலைப்பை படியுங்கள். அந்த இடம் ஒரு ஒட்டல்... சர்வரிலிருந்து சகலரும் ஜான் மால்கோவிச்கள்... பார்க்கும் இடங்களல்லாம் நந்தலாலாவாக. 

பிறகு நடக்கும் கதையை டிவிடி கிடைத்தால் வாங்கிப்பாருங்கள். 

இது கூடுவிட்டு கூடு பாய்வதையோ, ஸ்பிலிட் பெர்ஸ்னாலிட்டியோ, அல்லது ஆவி பிடித்து ஆட்டுவதையோ கருவாக கொண்ட கதையில்லை. இது ஒரு சர்ரியல் வகைப் படம்.

மால்கோவிச்சின் நடிப்பு, உடல் மொழி க்யுசாக்-ஆக மாறும் இடங்களில் பின்னியிருக்கும். அவனை ஏன் ஒரு மகா கலைஞானாக நாம் காண்கிறோம் என்பதும் புரியும்.

முடிந்தால் பாருங்கள்....ஒரு சுவரசியாமான, வித்தியாசமான படத்தை பார்த்த திருப்திக்கிடைக்கும். அதற்கு நான் கியாரண்டி.

அதுசரி... தம்பி, உனக்கு யார் கியாரண்டி? என்கிறீர்கள்தானே.

No comments:

Post a Comment