"ர்ர்ரிட்டது" என் செல்பேசி இன்றுக்காலையில்.
அழைப்பையேற்று சொன்னேன் 'வணக்கம், ஜாக்கி'.
"அவரு 'வணக்கம் ஜாக்கி' ன்னு சொல்றாரு, நீங்களே பேசுங்க" என்கிற பெண் குரலுக்குப் பின் ஜாக்கி " காலை வணக்கம் யுவா, இதுதான் என் லோக்கல் எண்" என்றார்.
அடடா, சகோதரிப் போல... ஜாக்கி ஒரு கலாட்டா செய்யஇருந்ததைக் காலியாக்கிட்டேனோ என்றேண்ணியப்படி, பதிலுரைத்தேன் "அதான் மழை காட்டிகொடுத்துவிட்டதே, பெங்களுருக்கு ஒரு நல்லவர் விஜயம்-னு".
அவர் கொடுத்தது ஒரு தெய்வீகச் சிரிப்பு பதிலாக " ஹஹஹ்ஹா".
மேலும் மிகச்சிறிய உரையாடலுக்கு பிறகு, அலுவலகத்துக்கு கிளம்புவதிலுள்ளேன் என்கையில் அவர் சொன்னார் " எங்கம்மா சொல்லியிருக்காங்க மேயற மாட்டை நக்கற மாடு கெடுக்ககூடாதுன்னு... நீங்க கெளம்புங்க பின்னர் பேசுவோம்".
நானும் குட்டை, மட்டை -னு ஏதோ ஆரம்பித்து, அதுக்கு இது செட்டாகாதே என்று பரஸ்பரம் இணைப்பைத் துண்டித்தோம். ஆனால் என் எண்ணங்கள் தொடரிட்டன. விளைவு இந்தப் பதிவு.
எது மேயற மாடு? எது நக்கிற மாடு?. இந்த சொல்வாடை பொதுவாக இருப்பதுதான். சிலருக்கு போன தலைமுறை சொற்றொடர், திட்டுவதற்கு.
மேய்வது வேலைசெய்வதாம். நக்குவது ஓபி-யடிப்பதாம் அல்லது வேலைஇல்லாததாம்.
கோடைகால விடுமுறைக்கு ஊரிலிருக்கும்போது நடந்தது இது. தாத்தாவின் மளிகைக்கடைக்கு சரக்கெடுக்க என் மாமாப்பையன் சைக்கிளில் பக்கத்துக்கு நகரத்திற்கு செல்வது வழக்கம். அவன் என்னை விட ஒன்றிரண்டு வயதுதான் மூத்தவன். அன்றைக்கு செல்லும்போது, நானும் பின் கேரியரில் தொத்திக்கொண்டு உதவிப்பெடலிடலானேன். பாத்துபோய்விட்டு வாங்க என்றார் எங்கள் ஆயா.
வெயில் காலையிலிருந்து மதியத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. நகரத்தில் வியர்வைப் பொங்க நுழைந்து கடைத்தேருக்குப் போகும் வழியில் ஒரு சினிமா போஸ்டர். "Hands of steel " - மிரட்டியது. நான் பாண்டுவின் (அவன் பெயர்) முதுகைச் சுரண்டினேன். என்பார்வை போகும் பாதை வழியே போஸ்டரைப்பார்த்தான். ஒன்றும் பேசவில்லை. அடிக்கபோகும் கமிழனை கூட்டிகழித்தவனைபோல் சைக்கிளைத் திருப்பினான் திரையரங்கை நோக்கி. இங்க்லீஷ் படந்தானே சீக்கிரம் முடிஞ்சிடும் - என்பது சமாதானம்.தாத்தா கல்லாப்பொட்டியுலும், கேட்டச் சரக்கை எடுத்துகொடுக்க ஆயா, பக்கத்தில் தராசுலருகிலும் அமர்ந்திருந்தனர். ஸ்டாண்ட் போட்டு சைக்கிளை நிலைக்கொண்டுவருவதற்க்கு முன்னரே "என்னடா லேட்டு?" என்ற தாத்தாவின் அதிர்ந்த கேள்வியால் நிலையிழந்தோம். "கஸ்டமரு எவ்ளோ நேரமா காத்துனிருக்கார் பாருங்க" என்று தொடர்ந்தார். மேல்துண்டோடு, சவரம் செய்யப்படாத, வெண்மை கொஞ்சம் தூக்கலாகஇருந்த மூன்றுநாள் தாடியோடு வெளிபெஞ்சில் உட்கார்ந்திருந்தவரை அப்போதுதான் லுக்கிட்டோம். ஒரு நமநமப்போடு அந்தப் பெருசு இருந்ததாகப்பட்டது. அப்படியென்ன சரக்காயிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், பாண்டு பையிலிருந்த அந்த 301 பீடிக்கட்டையில் ஒன்றை பிரித்துக் கொடுத்தான். தாத்தாவின் முன்னர் கேள்விக்கு பதில்சொல்லும் விதமாக, ஆயா என்னைப்பார்த்து "இவனாலத் தானிருக்கும்" என்றார் உறுதியாக. பீடியில் ஒன்றைப்பத்த வைத்தப்படியே "அக்கா கேட்டதுயில்ல... மேயற மாட்ட நக்கிற மாடு கெடுத்துருக்கும்" என்று வாயால் பின்னூட்டம் அடித்து நடையைக்கட்டியது அந்தப் பெருசு.
அவரின் முதுகை வெறித்தேன் "கணக்குச் சொல்லி வாங்கிப்போக வேறந்த இடமும் இல்லாதாலே, இருந்து வாங்கிபோற நீ, இந்த கருத்தைச் சொல்றியா?" என்று கடுப்புடன் நினைத்தவாறே.
இப்படியாக நாம் ஒவ்வொருவரும் கேட்டுருக்கக்கூடிய ஒரு சொல்வாடை தான், வெவ்வேறு சந்தர்ப்பத்தில்.
எனக்கென்னம்மோ நக்கற மாடு கொஞ்சம் விவரமோ என்றுத் தோன்றுகிறது. பின்னே?... நல்லா மேயவிட்டு, உடம்பை தேத்தவிட்டு,... காம்பு பிழியக் கறக்கின்ற அல்லது நுரைத்தள்ள வண்டியிழுத்த கொடுமையெல்லாம் அனுபவித்து, சரி இனிமேல் நோஞ்சானகவே இருப்பது உத்தமம் என்று நக்கிக்கொண்டிருக்கலாம். அதன் அனுபவப்பாடம் மூலம் மேயறதை மாற்ற முயற்சித்திருக்கலாம்.
நாம் அதை, கெடுப்பது என்கிறோம். இந்த மனிதர்களே மோசந்தான்.
உண்மைதான் யுவா.. அந்த பிளாஷ் பேக் அருமை.. நக்கறமாடு நோஞ்சானாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை பசி அடங்கிய மாடாககூட இருக்கலாம்...பாசத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.. சரி நாமதான் சாப்பிட்டு விட்டோமே மற்றவர் சாப்பிடட்டும் என்ற மனநிலையாக இருக்கலாம்....
ReplyDeleteஆயா என்ற வார்த்தை கேட்கும் போதே ஊரில் இருக்கும் ஒரு உணர்வு.
நன்றி ஜாக்கி,
ReplyDeleteஅட மேலும் சில விளக்கங்கள்.
ஆயாவில்தான் அன்னியோன்யம் கூடுவதாகப் படுகிறது.
பிளாஷ் பேக் நன்றாக இருந்தது,
ReplyDeleteவாசிக்கும் பொழுது பின்னோக்கி பயணித்தது போன்ற
உணர்வு.
உங்களுடைய ஓவியத்தில் மாடு எதை நக்குகிறது?
புல் ?
நன்றி பாலா, அது புல்தான். வ - லாம் இல்லை.
ReplyDeleteபெங்களூர் மாடு போலிருக்கிறது !!!!
ReplyDeleteபுல் (full) மட்டும் சாப்பிடும் ???
பொதுயிடத்தில்... என்ன இதெல்லாம்? அதெல்லாம் முன்பொருக்காலம். இப்பலாம் வ தான்.
ReplyDeleteஅருமையான விவரணை. எங்க அண்ணன் இன்னும் 10 நாள் அங்கனதான் இருப்பாரு.நானும் ரெண்டு நாள் வனாந்திரத்துல இருந்தேன் அண்ணன் கூட. ரொம்ப இனிமையா நகர்ந்தது சனி,ஞாயிறு.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகடலூர்க்கும்,பாண்டிக்கும் எவ்ளோ பாசம் :-)
நன்றி மரா, விடயங்கள் உள்ளன பகிரப் பல. தாங்களும் வரவேண்டியது... இங்கே ஒரு சந்திப்பு போடலாம் -ல.
ReplyDeleteபடித்தேன் தங்கள் அனைவரின் பங்கேற்பை. அன்றைய செல்பேசி அழைப்பிற்கும் நன்றிகள்.
நல்ல ப்ளாஷ்பேக்... எனக்கும் இந்த மாதிரி நிறைய நினைவுகள் இருக்கின்றன...
ReplyDeleteநல்ல நடை இன்னும் நிறைய எழுதுங்க...
சூப்பர் ப்ளாஷ்பேக் யுவா. நாம எல்லாருமே பல நேரங்களில் நக்கற மாடாகவும், சில நேரங்களில் மேயற மாடாகவும் தான் இருக்கோம்னு தோணுது.
ReplyDeleteநன்றி சங்கவி,
ReplyDeleteஉற்சாகம் வருகிறது. எழுத முயற்சிக்கிறேன் நிறைய.
நன்றி ஜானகி,
உண்மைதான். வருகைக்கு மிக்க மேலும் நன்றிகள் .
//உதவிப்பெடலிடலானேன்//
ReplyDeleteசுஜாதா மட்டும் இப்போ இருந்து.......... இந்த வார்த்தையை படித்திருந்தார் எனில் உங்களை நிச்சயம் பாராட்டியிருப்பார்..
நன்றி பொன்சிவா,
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும். வாத்யார் வீச்சே தனிதான். அதன் தெரிப்பின் துளியை எங்கயாவது பிரதிபலித்தாலே ஒரு ஷொட்டு கொடுத்துக்கொள்ளலாம் நமக்கே.