Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Friday, February 18, 2011

பயம் நல்லது!

'வீரம்'னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது - இது ஒரு படத்தில் கமல் சொன்னது, ரேபான் கண்ணாடியணிந்து கண்களை மறைத்தபடி.

'அட இது கொஞ்சம் சுலபம் போல' என்று நினைத்து, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல், ஓரிரு எதிர்-வார்த்தைகளை உதிர்த்து, சில சமயம் சில மனிதர்களை நேர்க்கொண்டாலும், ஆடும் கால்கள் உண்மையை "நான் உள்ளேன், ஐயா " என்கின்றன.

'இளங்கன்று பயமறியாது' என்பார்கள். என் இளமைக் கால ஞாபகங்களில் பயங்களும், தயக்கங்களும்-தான் தங்கள் BookMarks - ஐ போட்டுவைத்துள்ளன. அந்த தயக்கங்களும் பயங்களால் நேர்ந்தவைதான்.


மூன்றாம் வயதில், அப்பா என்னருகில் உட்கார்ந்து தொடைகள் சிவக்க, "அ-ஆ" "A -B " க்களை என் மண்டையில் ஏற்றியபோது - பயம். அடிகளை தவிர்க்க "அ-ஆ" "A -B " க்களோடு சமரசம் செய்துக்கொண்டு, அவைகளை மண்டையில் உட்காரவைத்தேன். விளைவு, அது என்னை வகுப்பில் முதலிரண்டு மாணவானாக உட்காரவைத்தது.

ஒழுக்கமற்றோ, சுத்தமற்றோ இருந்தால் பள்ளியிற் விழுகின்ற பிரம்படியும், போடுகின்ற முட்டிக்கால்களும், ஆசிரியர்களின் அசூசை பார்வைகளும் - பயம். வசதியில்லாவிட்டாலும் இருப்பதைக்கொண்டே என்னை "பளிச்'சென்று காட்டியும், ஈயாடினாலும் தலையாட்டாமல் ஆசிரியரை நேர்ப்பார்வையுடன் 'கவனி'த்த வகுப்புக்களாலும், அது என்னை வகுப்புத் தலைவராக்கியது.

பள்ளிமதியஉணவு இடைவேளையில், தெருவில் பசங்களோடு ஓடிப்பிடித்து விளையாடுகையில் கத்தி உச்சரித்த "மயிர்", மிதிவண்டியில் போன ஒருவரை நிறுத்தி "ஏம்பா... பார்க்க நல்லபுள்ளை மாதிரிருக்க... ஏன் கெட்டவார்த்த பேசுற?" என்று அதட்ட வைத்தது. அதுமுதல் வெளியிடங்களில் தெளிக்கப்படும் 'ஒரு சொல்'களும், கூரியப் பார்வைவீச்சுக்களும் - பயம். நிதானித்து, சற்று தயக்கத்தோடும் வெளியிடங்களில் என்னை வெளிப்படவைக்க, அது வாங்கிக்கொடுத்த பட்டம் "நல்ல புள்ளை".

அப்பா வாரயிறுதி நாட்களில் வெளியூர் செல்லும்போதெல்லாம், திரும்பும் நேரம் வருகையில் வீட்டுத் திண்ணையில், தெருவில் நின்று எதிர்ப்பார்க்கையில், மனதில் எழும் 'விபத்து' கற்பனைகளும், அது தரும் " நாளை பிறகென்ன?" என்ற வெறுமைகளும் அடிவயிற்றில் தந்த - பயம். வருடங்களை வீணாக்காமல், வாய்ப்புக்களை நழுவவிடாமல் செய்து, அது வாங்கிகொடுத்தது ஒரு வேலை -குறைந்தபட்ச வருமானத்துடன் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்திசெய்ய.

பயங்கள் வெவ்வேறு நிலைப்பாட்டுடன், வெவ்வேறு சூழ்நிலைகளால், எனது அடிவயிற்றின் ஒரு உணர்வாய், ஒவ்வொருக் காலகட்டத்திலும், இருந்து வந்திருக்கிறது இன்றும்கூட. பயங்களே என்னை பயப்பட வைத்தும், யோசிக்க வைத்தும், கவனிக்க வைத்தும், செயல்பட வைத்தும் இன்று ஒரு தலைமைப் பொறுப்பைக் கொடுத்துள்ளது குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி.

பிறகென்ன அது என்னை தவறே செய்ய வைத்ததுயில்லையா? செய்திருக்கிறேன். அவை கொடுத்த வடுக்களும், கொடுத்துக் கொண்டிருக்கும் வருத்தங்களுமே இப்போது என்னை மீண்டும் அதில் போடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றன.

அப்படி தடுக்காவிட்டால்?.... மெல்ல... எழுகிறது பயம்.

தொடர்வேன்.

3 comments:

  1. யுவா

    நம்ப அரசியல்வாதிக்கு இந்த பயம் இருந்திருந்தால் நம்ப நாடு எப்போதோ முன்னேறிஇருக்கும்.

    பாலா

    ReplyDelete
  2. நன்றி பாலா... அவர்கள் பயமெல்லாம் மாட்டிக்கொள்ளக்கூடாதே என்பதில் தான்... செய்யக்கூடாது என்பதிலல்ல

    ReplyDelete
  3. நம்ம ப்ளாக்-தானா?............................................
    நன்றி Philosophy Prabhakaran !

    ReplyDelete