Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Wednesday, August 21, 2013

டா...க்சி டாக்சி.

எப்போது அமெரிக்கா சென்றாலும் லோகல் பயணத்திற்கு டாக்ஸி தான் பயன்படுத்துவேன். இன்டெர்நேஷனல் உரிமம் எடுத்துவந்து ரென்டல் கார் ஓட்டலாம்தான். உரிமம் எடுப்பதில் ஒரு சிக்கல். என்னுடையது சென்ட்ரலைஸ்ட் டேடா அட்டையில்லை... அந்த சிறிய புத்தகம். அதனால் நானிருக்கும் பெங்களூர் ஆர்டிவோ-வினர் இங்கே' கொடுக்க ஆகல்லா... சென்னை ஓஹி தொகலி' ன்பனர்... ஆதலால் ஒவ்வொரு முறையும் தவறும்.

அதுமட்டுமல்லாமல், லெஃப்ட் ஹாண்ட் ரைட் ஹாண்ட் குழப்பம் வேறு. யாரவது ஓட்டி நான் கோ-பாஸஞ்சர் சீட்டில் உட்காருகையில்,  அடிக்கடி நான் கால்கலால் ஆக்சியும் ப்ரெக்கையும் மெதித்தவாறிருப்பேன்.. அப்ப கியரும் போடுவிங்களான்னு கேக்க மாட்டிங்கதானே. ஐ நோ யு கைஸ் ர் ஜென்டில்ஸ்.

ஆகவே டாக்சி என்கிற கேப் தான். இதுவரை அனைத்து டாக்ஸி ஓட்டிகளுடன் நல்ல அனுபவமே கிடைத்துள்ளது. மெக்ஸிகன், ஆப்கானி, கருப்பு மற்றும் வெள்ளை அமெரிக்கன், இன்று டான்ஸனியன் என்று பலருடனும் பயணித்திருக்கிறேன்.

ஒருதடவை ஹுஸ்டனில் என்னை ஏற்றிக்கொள்ள ஒரு ஆப்கானிக்கும் ஒரு பாகிஸ்தனிக்கும் போட்டி... வாய்த்தகராறு... யார் முதலில் வந்தது என்று. அவர்கள் (நாட்டு) தகராறுகளை பெரியவர்களே தீர்க்கமுடியவில்லை யென்பதால்... நான் வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டுருந்தேன். சற்று நேரம் எனக்கு நம்ப சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்தமாதிரி இருந்தது. பின்னாடி திரும்பி அந்த சிவப்பு பில்டிங் தெரியுதான்னு பார்க்க நினைத்தேன்.

ஒருவழியாக ஆப்கானி என்னை வென்றார். பின் பயணம் முழுக்க அந்த பாகிஸ்தானியரின் "பெருமை"களை பேசியபடியே வந்தார். அப்படியே இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையும் இடையிடையே விவாதித்தோம். இன்னொரு முறை, லாஸ் ஏஞ்சல்ஸில்... அவரும் ஆப்கானி... மிகவும் உதவியாக, நான் போகவேண்டிய அட்ரஸ் தவறியும், அழகாக கொண்டுசேர்த்தார். அவரையே அன்றைய பயணங்கள் முழுவதற்கும் உபயோகித்துக்கொண்டேன்.

ஆப்கானியருக்கு பொதுவாக இந்தியாவின் மேல் நல்ல மதிப்பு... இந்தி படங்களின் மேல் நாட்டம். ஏதாவது மருத்துவ சிகிச்சைக்கு இந்தியாவிற்கு வருவது பணம் சேமிப்பதாக இருக்கிறது அவர்களுக்கு. அந்த மெடிக்கல் ட்ரிப்பை சொந்த ஊருக்கு போகும் பயணத்துடன் இணைத்துக் கொள்கிறார்களாம்.

இந்த ஆப்கானியர் தனக்கு ஒரு ஆறுமாதங்கள் டைம் கொடுத்தால் நாடுகளுக்கிடையே இருக்கிற பிரச்சினைகளை தீர்த்துவிடுவேன் என்றார். ஆனால் ஒரேவொரு கண்டிஷன் அப்ளைட். நோ அரசியல்வாதிஸ் இன்பெட்வின்ஸ். அதான் நமக்கு தெரியுமே என்கிறிர்களா?!!

இன்று சந்தித்த டான்ஸனியருக்கு நான் இண்டியன் என்றவுடன்... ஒரே குஷி. கேரளா, சென்னை என்று பேசியபடி பல விசயங்களைப் பகிர்ந்துபடி ஓட்டினார். அவர்களுக்கு அப்பலோ மருத்துவமனை ட்ரிட்மெண்ட் தானாம். நிறைய இவர் நாட்டவரை அங்கு பார்த்திருக்களாமே என்றார். இவர் ஒரு கிருத்துவர். பிரச்சகராக பணியும் ஆற்றுகிறாராம், லூத்ரென் சபை ஒன்றை நிருவி. ஆரம்பத்தில் அவர்களின் ஸ்வஹிலி (Swahili) மொழி பேசுவோர் மட்டும் இருந்தனராம்... இப்போது அமெரிக்கர்களும் உறுப்பினர்களாம். இந்து, புத்த மதத்தினரை உயர்வாக பேசினார். நிறைய இந்து நண்பர்களுடன் பழகியிருப்பதால் (அவர் முன்னர் வேலை செய்த அலுவலகம் மூலம்), தேங்காய் உடைப்பது, சாம்பலை நெற்றியில் இட்டுகொள்வது என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டிருந்தார்.

ஒரு சமயம் ஷாப்பிங் செய்யும்போது, ஒரு இண்டியன் ஸ்டோரில், கிருஷ்னர் சிலை சேல்சில் பார்த்தாராம். பின்ன்ர் அவரின் இண்டியன் நண்பரிடம் "என்னப்பா... உங்க கடவுளை ஒன்று வாங்கினால் இரண்டு எடுத்துக்கோனு (Buy 1 Get 2)விக்கறீங்க" ன்னு சொன்னாராம், கிண்டலாக.

மனதில் நினைத்துக்கொண்டேன்... எங்கள் கடவுளர்களும் வியாபார பண்டமாகி பல காலங்கள் ஆயாச்சி என்று, வெளியே அவருக்கு சிரித்தபடி.

Tuesday, August 20, 2013

சமைத்ததை சொல்வேன் - 2

போன "சமைத்ததை சொல்வேன்"-ல் சிக்கன் டமாரக்குச்சியையும், சில இன்கிரிடியன்ட்ஸையும் வைத்து செய்த தொக்கை தொடர்ந்து, கிட்டத்தட்ட அவற்றைக்கொண்டு வறுத்த வறுவல் இது.
மெக்ஸிகன் சிலாந்ரோவின் (Cilantro) தழையின் சைஸால் சிக்கன் சைஸ் ரொம்ப சின்னதா தெரியுதுயில்லை?!!

செய்தது போக மீதி டமாரக்குச்சிகள் ஃப்ரிட்ஜை திறக்கும்போதெல்லாம் சிரித்தன -"இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே... அன்பே" என்று. கடுப்பில் எல்லாத்தையும் பிச்சி போட்டா... அய்... "பிச்சிப்போட்ட சிக்கன்" ரெடி!
மேற்கண்டவாரு கொஞ்சம் க்ரெவியா எடுக்கலாம், அல்லது அடுப்பில் வைத்ததை மறந்து போயி...
இப்படி ட்ரையா எடுக்கலாம். என்ன... மெய்ன் டிஷை மாத்த வேண்டியதுதான்...சாதத்துக்கு பதில் பகார்டி ரம்!

சிக்கனை பிரிச்சிமேய்ஞ்சாச்சி... அப்புறமென்ன? முட்டைதான்.

இது உருளையும் முட்டையும் போட்டு செய்த வறுவல்.
எதுக்கு மேன் இதெல்லாம் என்றால்.....

ஒரு பதிவை தேத்ததான்!

Thursday, August 15, 2013

எல்லாம் John Malkovich மயம்!!!

நேற்று காலை சிகாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் பயணம். அதிகாலை 2:30க்கு எழுந்து கிளம்பியதால், சீட்டில் பெல்ட்டை இறுக்கி , இடுப்பை சிறையிட்டபின், கண்களை மூடி, டேக்ஆஃப்பிற்கு காத்திருந்தேன். விமானம் ஜிவ்வென்று மேலெழும்பும் லயத்தில் எனக்கு தூக்கம் தூக்கும் எப்போதும்.

சற்று நேரம்தான் அந்த கண்ணயர்வு. "எனிதிங் டு ட்ரிங்க்?" குரல் கேட்டு... எப்போதும்போல் "டொமெட்டோ ஜூஸ், கோக், டாக்டர் பெப்பர், ஸ்பிரிட், ஜஸ்ட் வாட்டர்.." என்று மனதுக்குள் குழம்பி "ப்ளாக் காபி ப்ளீஸ்" என்றேன் அவளிடம்... இல்லை... அவனிடம். இந்த "யுஎஸ் ஏர்வேஸ்" நம்ப "ஏர் இண்டியா" போல. வந்ததும் ஒரு சிப் வாயில் வைத்தபிறகுதான் "அடடா தூங்க நினைத்தோமே... இப்பபோய் காபியா?" என்று நொந்துகொண்டே கப்பை முடித்தேன்.

இனி வேலைதான் என்று தெளிந்து, மடிபம்பரத்தை திறந்து, பிறகு செய்யவேண்டிய ப்ரசென்டேஷனை அவ்வப்போது சரிசெய்துக்கொண்டே முட்டைஜன்னலின் வழியே... மேக அடுக்குகளின் இடையே தெரியும் பஞ்சுப்பொதிகைகளின் பலவித வடிவங்களையும், அதனூடே விமானம் இன்னும் மேலெழும்ப... கீழே தெரியும் அவைகளின் பல படிமங்களையும் ரசித்தவாறேயிருந்தேன்.

அடுத்த அரைமணியில் லாண்ட்-ஆக வேண்டியஆரஞ்சு கவுண்டி வரயிருந்ததால், இப்போது பஞ்சுப்பொதிகைகளின் கீழடுக்கின்மேல் உயரம் இறங்கியிருந்தது. மலைகள், காடுகள்,ஆறுகள், ஏரிகள் மற்றும் அவற்றினூடே ஒடும் பாதைகள் என காட்சிகள் விரிந்தன... அவற்றை துடைத்தவாறே மேகங்களும் சென்றன அங்குமிங்கும்.

என்னுள் இருக்கும் கவிஞனை இப்போது உசிப்பி ஏதாவுது எண்டர் வரிகளைப் போடலாம்தான். ஆனால் அப்போது அந்த காட்சிகள், த்வைதம் அத்வைதமாகி... நானாகி போயிருந்தன.

 'ரோஜா'ன்னா... 'ரோஜா'ன்னா... 'ரோஜா'தானே...(A Rose is a Rose is a Rose!).

விவரித்தால் வார்த்தைகளாகத்தான் மிஞ்சும். வீண்.

சில கணங்கள் அப்படி வாய்க்கும். இறந்த, எதிர் காலங்களில்லாமல்.. அவை நிகழ்ந்தவண்ணம் இருக்கும். லயிப்பவன், லயிப்பதை கவனிப்பவன் என்று எவனும் இல்லாமல் இருக்கும் கணங்கள் அவை. காமத்தில், இராஜ போதையில், த்யானத்தில்... சிலநேரங்களில் கிடைக்கும் கணங்களாக.

Being John Malkovich - ல் ஜான் மால்கோவிச்சிற்கு கிடைக்கும் அந்த நேரங்கள்...

இங்கு ஒரு சானலில் இத்திரைப்படம் பார்க்க கிடைத்தது. வருடம் 1999-ல் வெளியானப் படம் இது. ஜான் க்யுசாக்(John Cusack) ஒரு Puppeteer. பொம்மைகளை கயிற்றால் ஆட்டுவிக்கும் ஒரு பொம்மலாட்ட கலைஞன். அங்கீகாரத்திற்கு போராடுபவன். அவன் தற்செயலாக, தான் புதியதாக வேலைக்கு சேர்ந்த, ஏழரை (?!) மாடியில் இருக்கும் அந்த கம்பனியில்… ஒரு விண்டோ ஏசி அளவில் உள்ள ஒரு portal-யை கண்டுபிடிக்கிறான். அது வலைவாசல் இல்லை, ஒரு தலைவாசல்... ஆம்...

அது நடிகர் ஜான் மால்கோவிச்சின் தலைக்குச் செல்லும் நுழைவாயில்.

அதில் நுழைந்தவர்கள் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு அந்த நடிகனின் கண்களின் வழியே, அவனது வாழ்க்கையை வாழலாம். பிறகு வேறெங்கோ ஒரு ஃப்ரிவேயின் பக்கமாக அந்தரத்தில் உள்ள வெளிவாசல் மூலம் விழுந்து வெளியேரலாம். இதை வைத்து அவனும், அவனுடன் வேலைப் பார்க்கும் பெண் Catherine Keener -மாக சேர்ந்து ஒரு ட்ரிப்பிற்கு 200 டாலர் என பணம் பண்ண ஆரம்பிக்கிறார்கள்.

கேதரினுக்கும், ஜான் க்யுசாக் மனைவிக்கும் (Cameron Diaz) மால்கோவிச் மூலம் நடக்கும் ஒரு கில்மா விவாகரத்தால், க்யுசாக் மால்கோவிச்சை தான் தலையிருக்கும் நேரம் ஆட்டுவிக்க முடியும் என்று அறியவருகிறான். 

மால்கோவிச்சிற்கும் தன்னை யாரோ இயக்குகிறார்கள் என புரியவருகிறது.
பின்வரும் காட்சிகளில் அந்த தலைவாசலை கண்டுபிடித்து, உள்ளே நுழைய...என்னதான் நடக்கும் என்று ஆவலாய் பார்த்தால்...


முதலில் அவனது கைகளால் சாப்பிட்டுகொண்டிருப்பதை காண்கிறான்... தலையை நிமிர்த்தினால் எதிரே திரண்ட மார்புடன்... மால்கோவிச். பெண்ணின் உடலில் அவனது தலை... சுற்றும்முற்றும் பார்க்க... இப்போது இந்த பதிவின் தலைப்பை படியுங்கள். அந்த இடம் ஒரு ஒட்டல்... சர்வரிலிருந்து சகலரும் ஜான் மால்கோவிச்கள்... பார்க்கும் இடங்களல்லாம் நந்தலாலாவாக. 

பிறகு நடக்கும் கதையை டிவிடி கிடைத்தால் வாங்கிப்பாருங்கள். 

இது கூடுவிட்டு கூடு பாய்வதையோ, ஸ்பிலிட் பெர்ஸ்னாலிட்டியோ, அல்லது ஆவி பிடித்து ஆட்டுவதையோ கருவாக கொண்ட கதையில்லை. இது ஒரு சர்ரியல் வகைப் படம்.

மால்கோவிச்சின் நடிப்பு, உடல் மொழி க்யுசாக்-ஆக மாறும் இடங்களில் பின்னியிருக்கும். அவனை ஏன் ஒரு மகா கலைஞானாக நாம் காண்கிறோம் என்பதும் புரியும்.

முடிந்தால் பாருங்கள்....ஒரு சுவரசியாமான, வித்தியாசமான படத்தை பார்த்த திருப்திக்கிடைக்கும். அதற்கு நான் கியாரண்டி.

அதுசரி... தம்பி, உனக்கு யார் கியாரண்டி? என்கிறீர்கள்தானே.

Friday, August 9, 2013

சமைத்ததை சொல்வேன்!

வெளியே திரும்பிப்பார்த்தேன்... கான்ராஸ்டை குறைத்தமாதிரி கருமை படர்ந்து தூறிக்கொண்டிருந்தது. சிகாகோவின் சம்மர் ஷவர். மணியைப்பார்த்தேன் மாலை 5.40. பசித்தது... எதைக்கொறிக்கலாம் என்று யோசித்து, அந்த முடிவையெடுத்தேன் சமைக்கலாமென்று.

விமானத்தின் வயிற்றில் சுமந்து, கஸ்டம் ஃபாரமில் "நோ ஃபுட்" என டிக்கடித்து எடுத்துவந்த பெட்டியில், எம்டியாரின் ரெடிடு ஈட்டுகளும், மற்றும் மாகி நூடுல்சும் இருந்தது. இதுவெல்லாம் "சமைத்த" கணக்கில் வராது என்பதால் (பின்னர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும்போது), குளிர்சாதனப்பெட்டியிலிருந்த சிக்கன் டமாரக்குச்சியை எடுத்து கொஞ்சம்போல் சுடுநீர் ஊற்றி,  வெளியே வைத்தேன் வெப்பம் சமநிலையையடைய. பிறகு நான் செய்த அய்ட்டத்தை செய்முறை விளக்க படங்களுடன் கீழே உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன். 

பார்வைக்கு கொடுத்துள்ளதை முயற்சி செய்துப் பார்ப்பது அவரவர் உள்ளத்துணிவும் உடல்நலத்தையும் பொருத்தது. அதற்கு கம்பனி பொறுப்பல்ல!

முதல் அடி: இவையெல்லாம் தேவையான பொருட்கள்... தேவையான அளவா? அதான் படத்திலுள்ளதே.


முதல் அடி: தொடர்கிறது... 


அந்த மஞ்சள் குப்பியிலுள்ளது தூய எலுமிச்சைச் சாறு.

முதல் அடி: தொடர்கிறது...  இதான் கடைசி.


எப்போதும் சைட்டிஷ் வரும் பதத்தை பொருத்துதான் மெய்ன்டிஷ் சாதமா? சப்பாத்தியா? அல்லது மேற்சொன்ன பெட்டியிருந்து ஏதாவுது ஒன்றா என்று முடிவெடுப்பேன். ஆனால் இன்று... மிக (வும்) நம்பிக்கையுடன் இந்த அழகில் சப்பாத்தி மாவை பிசைந்து வைத்தேன்.

இரண்டாம் அடி: தவாவில்... இப்படி வத(தை)த்துக்கொ(ல்லு)ள்ளுங்கள். 


ஆமாம்பா... அதற்கு முன்னாடி ஸ்டவ்வை பற்றவைக்கவேண்டும். சற்றெவேனும் சமைக்க தெரிந்தவரை பக்கத்தில் நிருத்திக்கொள்ளுங்களப்பா... தொணதொணக்காமல்.

மூன்றாம் அடி: தக்காளியை அரைத்து அதில் சேருங்கள்.


எதற்கு அப்படி அரைத்து சேர்ப்பதென்றால்... அய்... பக்கத்திலுள்ளவரைக் கேளுங்கள்.

நான்காம் அடி... ஒரு நிமிடம். 


நான் ஆரம்பித்திலே சிலபல தேவையான பொருட்களை சேர்த்து ஊற வைத்த சிக்கன், முப்பது நிமிடம் கழிந்து இப்படித்தான் இருந்தது. இருக்கனும்.

நான்காம் அடி: மூன்றாம் அடியை முடித்து இன்னும் சற்று வதக்கி, பிறகு மேலுள்ள மாரினேட்டட் சிக்கனை போடுங்கள்.


போட்டு, கீழ்காணும் நிமிட அளவில் மூடியைபோட்டு கொதிக்க விடுங்கள்.


அய்(?)ந்தாம் அடி: அவ்வப்போது கிளறி விடுங்கள்.இடையே...


மிச்சமீதி பொருட்களை எங்கெங்கு வைக்கவேண்டுமோ அங்கெங்கே வைத்துவிடுங்கள் பிறகு தேவைப்படுமல்லவா...


இதுவெல்லாம் குப்பைக்கு. முடிந்தால் பச்சை சிவப்பென்று பிரித்து.

ஆறாம் அடி:  ரகசியமாக கொத்தமல்லி தழையை தூவி ஓரிரண்டு நிமிடங்கள் கழித்து....


எதற்கு ரகசியமாக என்று பக்கதிலுள்ளவரை கேட்பீர்கள்தானே. நோ யூஸ்... நானே சொல்கிறேன்... அது வேறொன்றுமில்லை... "தேவையான பொருட்கள்" படங்களில் அது இல்லை. அப்ப அதுதான் நம்ம சீக்ரெட் இன்கிரிடியன்ட்.

ஏழாம் அடி என்று இனி அடியெல்லாம் இல்லை வெட்டுதான்... இப்படி ச்ர்வ் செய்து.


வாட்... சப்பாத்தி எண்ணெயில்லாமல்... சூப்பராயிருக்கா?!!! ம்ஹும் அதன் செய்முறை மட்டும் வேண்டாம். அதற்கு இன்னும் மனைவியிடமிருந்து காப்பிரைட் வாங்கவில்லை.

சும்மா சொல்லக்கூடாது... செமயா... சுகுரா... இருந்தது. அதே டேஸ்ட் வரணும்னா இன்னோரு சீக்ரெட் இன்கிரிடியன்ட் வேணும்.

 அதான்பா... 

சமைக்க நான்.

Saturday, February 23, 2013

விஸ்வரூபமும் அகஸ்தியரும்…

“விக்ரம்” படம் ஜாபர்கான்பேட்டை காசியில் (காசி ஏசி என்றுதான் சொல்வோம்) வெளியானபோது, குடும்பத்தோடு போய் வரிசையில் நின்றிருந்தோம் நுழைவுத்தாள் வாங்க. எட்டோ ஏழோ படித்துக்கொண்டிருந்த காலகட்டமது. வெளியே பெரிய பெரிய கட்டவுட்டில் காந்தக் கண்களோடு… டிம்பளை-ச் சொல்லவில்லை… கமல் தான். என்னா… கண்ணுடா (உத – மன்னிக்க)!!! கூடவே அந்த ராக்கெட்டும். தொங்கிக்கொண்டிருந்த வண்ண வண்ண பேப்பர் ஸ்டார்களையும், கொடிகளையும் எண்ணி… நம்பாளுக்குத்தான் அதிகமோ!?!?!! என்று மனதை சந்தோஷப்படித்திக் கொண்டேநின்றிருந்தேன் காலை மாற்றி மாற்றி.

வரிசையில் கவுன்டரை நெருங்க நெருங்க… அந்த பிங்க் மற்றும் வெளிரிய மஞ்சள் டிக்கட்கட்டும் குறைந்துக்கொண்டே வந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் காத்திருப்பு அது. ஆம், முதல்வரிசை ரசிகர்களெல்லாம் பார்த்து முடித்து, ஆர்ப்பாட்டமெல்லாம் ஓய்ந்த வேளைகளில்தான் குடும்ப குடும்பமாக படம் பார்க்கச்செல்லும் மத்தியவர்க்கத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். டிக்கெட்கள் கைகளில். தியேட்டரின் முன்படிகளில் அமர்ந்து, தேதியையும் நேரத்தையும் சரிப்பார்த்துக் கொண்டே கண்ணாடிக் கதவு திறக்குமா அல்லது தியேட்டர் இடிந்துகிடிந்து விழுந்திடுமா படம் பார்க்கும் முன்னர் என்று பகிரென்றிருந்தேன். திடீரென்று ஒரு சந்தேகம்... அப்பாவின் கைகளுக்கு மாறியிருந்த டிக்கட்டை பிடுங்கி படத்தின் பெயரை பார்த்தேன். விக்ரம். சரிதான். அப்பாவின் “அடேய்…” அப்போது காதுகளில் விழவில்லை.

பாதிப் படம் முடிந்தது; சீட்டைவிட்டு நகரவில்லை. ப்ளாஸ்டராப்பாரிசில் செய்திருந்த உட்சுவர் புடைப்புகளின் மேல் விழுந்திருந்த வெளிச்சபட்டைகளை, படம் அதுவரை கொடுத்த ஒருவித படப்படப்போடு கண்களால் மேய்ந்தபடி சீட்டில் சீசாடினேன். இடைவேளை ஒருவழியாக முடிந்து மீதிப்படமும் முடிந்த பின்னர்தான் ஏசியின் குளிர் உணர்ந்தது எனக்கு, அன்று.

ஏறக்குறைய அதேவித படப்படப்போடு சென்ற 28-செவ்வாயன்று மீண்டும் ஒரு கமல் படம். பெங்களூர் பன்னெர்கட்டா கோபாலன் மாலில் விஸ்வரூபம், மாலைக் காட்சி.

அதற்கு முன் ஞாயிறன்றுதான் ஊர்வசியில் காலைக் காட்சிக்கு ஆன்லைனில் புக்செய்து, குடும்பத்தோடு சென்று, அடித்துபிடித்து சாலையோரத்தில் அதுவும் நெரிசலான சிக்னல் அருகே காரை பார்க் செய்து, மனைவியாரையும் பசங்களையும் வண்டியிலேயே விட்டு செக் செய்ய சென்றால்… போலிஸாரின் மத்தியில் கேட்டுக்கு உள்ளேயிருந்தபடி “ஷோ கேன்சல்… ஆன்லைனா? பணம் டூ வீக்ஸ்ல வாபஸ் ஆயிடும்.” என்று அந்த இளைஞன் பதில்சொன்னதைக் கேட்டு, உயரே பறந்திருந்த பலூனில் கமலைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு பின் வீடுதிரும்பியிருந்தேன்.

பெங்களூரில் உறுதி 27-லிருந்து என்றறிந்தபின்னர்தான் புக் செய்திருந்தேன் என்றாலும்… மாலின் வெளியே வெறிச்சோடி ஒன்றிரண்டு காக்கிச் சட்டைகள் தென்பட்டதால், உள்ளுக்குள் காரில் நுழையும்போது வாசல்காப்போனிடம் “விஸ்வரூபம் ஜானேகியே க்கியா?” ஒரு கேள்வி… அவன் ஹிந்திவாலா அல்லவா. பதிலே சொல்லாமல் யோசித்தபடியே இருந்தவனைக் கடந்து சென்றேன். மனைவிடம் திரும்பி “என்னம்மா இது… இப்படி யோசிக்கிறான்… இன்னைக்கும் இல்லையோ?” என்றபோது, “ஹையோ அப்பா… அவன் நீங்க கேட்டது ஹிந்தியிலியான்னு யோசிக்கிறான்… நத்திங் எல்ஸ்” என்றாள் என் மகள் பின்சீட்டில் இருந்தபடி. ம்ஹும், தமிழனா இருந்து இதைக்கூட தாங்கலைனா எப்படி. பார்க்கிட்டு லிஃப்டில் ஏறும்போது அதன் இயக்குனரிடம் “விஸ்வரூபம்?” என்றதற்கு ஒரு ஆறுதலான தலையசைப்பு அவரிடமிருந்து. நம்மாதிரி பலர்பேர் பதட்டத்தோடு கேட்டுருப்பார்கள் போல.

கவுன்டரை அணுகி மெசெஜை காண்பித்து டிக்கெட்டை ப்ரிண்டிட்டு கையில் வாங்கினேன். பிறகுதான், பின்னால் வந்தார்களா என்று தேடி மனைவியாரையும் பசங்களையும் பார்த்து டிக்கெட்களை அசைத்தேன். மனைவியின் “அடேய்” என்ற பார்வையை இப்போது கண்டுகொள்ளவில்லை. டிடெக்டர் வாசலைக் கடந்து, செக்யூரிட்டி “அதை” தவிர மிச்சசொச்ச இடத்தையெல்லாம் தடவி என்னை உள்ளேவிட்ட போது முதல் நம்பிக்கை. “அதை” ன்னு சொன்னது தலையை.

நெ.1 திரையின் வாசலின்மேல் இருந்த நீள்செவ்வக பெட்டி, சிவப்பு புள்ளிகளால் “VISHWAROOPAM (TAMIL) SHOW:6.30PM” என்று ஓட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு அடுத்த நம்பிக்கை. உள்ளே சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்… வெளியே காத்திருந்த அந்த நேரத்தில்தான் மேல் சொன்ன “விக்ரம்” பதட்டம் ஞாபகத்தில் வந்தது. நடுவில் பல படங்கள் வந்து, பார்த்து சென்றாலும்… அது ஏனோ நினைவில் தங்கி இதனுடன் ஒப்பிடவைத்தது.

தொடரும்…