Relax!

வாழ்க்கைன்னா... அப்படித்தான்!!!

Monday, March 7, 2011

சைலன்சர் சூடும், எரிச் சீகலும்...தொடர்ச்சி

அவருக்கு நான் கொடுத்தது அரைமணி நேரங்கள் மட்டுமே. முடிந்தவரையில் பழையநிலைக்கு அதை திருப்பச் சொன்னேன். மறந்தும் வேலையின்போது சிரித்தறியாத அவர் தோராயமாக தலையசைத்தார்.  இப்பொழுது சைலன்சர்சூடு இன்னும் எரிச்சலைக் கூட்டியிருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தேன் சிவப்பு + சைன் தெரிகிறதா எங்கயாவது என்று. சற்றே தூரத்தில் தெரிந்தது ஒன்று, வெள்ளை பல்லிளித்த சுவரில் தொங்கியபடி.

கிட்டேநெருங்கியபோது, ஒரு பழைய கிராமத்து நாட்டுவைத்தியர் இடம்போல் காட்சியளித்ததால், தயங்கி போர்டை பரிசோதித்தேன். ஒரு ஆண்பால் பெயருக்கு பின் MBBS என்றுதான் போட்டிருந்தது. பர்சிலிருக்கும் பணத்துக்கும் தோதாக இருக்கும் என்ற சமாதானத்தோடு குனிந்துபடி உள்ளே நுழைந்தேன் ஆள்அரவமற்ற முன்னறையில். அட அட்லீஸ்ட் ஒரு சின்ன பையன்கூடவா இல்லை டோக்கன் போடுவதற்கு என்றெண்ணியவாறே, ஆடிய திரைச்சீலை வழியே அடுத்த அறையை எட்டாமல் பார்த்தேன். டாக்டர் சீட் காலியாகயிருந்தது (அப்ப நீங்க அப்ளை பண்ணவேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கக்கூடாது... நான் மெக் இன்ஜினியர்(மக்கு-யில்லை)). பேஷண்ட் சேரில் புடவைக்கட்டிய பெண்ணொருவர் அமர்ந்திருந்தார், ஏதோவொரு புத்தகத்தைப் படித்தபடி.

'யெஸ், கம்-இன்' - பியானோவின் இசை. ஏனோ சிறு படப்படப்பு கூடியது; திரையை விலக்கி உள்ளே நுழைந்து அவரைப் பார்த்தேன். வெகுதிருத்தமாக, பளிச்சென்று, நேற்றுதான் கல்லூரி முடித்த தோற்றத்தில் இருந்தார் அந்தப் பெண். இந்த எழுத்தாளர்கள் எப்படித்தான் பெண்களின் அழகை வர்ணிக்கிறார்களோ...?!!! நானும் இங்கே முயன்றேன்... முடியவில்லை. எல்லாபக்கத்திலிருந்தும் தாக்கும் அழகில் டீடெய்ல் பார்ப்பதுக் கடினம். அந்த தாக்கத்தின் வெம்மை மட்டுமே தெரிந்தது எனக்கு அப்போது..., இப்போதும். மிகலேசான புருவநெரிப்பில் தெரிந்த 'என்ன?' என்ற கேள்வியில், அவர் டாக்டர் தானா என்கிற ஆராய்ச்சிக்கு செல்லாமல் (போர்டில் ஆண்பெயர் மட்டும்தான் பார்த்தேன்), சொன்னேன் என் பைக் சாகசத்தை. என்னை உட்கார வைத்து, கைபடாமல் பார்வையிட்டு, கொழகொழவென்றிருந்த ஏதோ லோஷனை அதன்மேல் பரவவிட்டார். ப்ரிஸ்கிருப்ஷன் தாளில் எதோ வரைந்தார். 'இந்த டிடி இன்ஜெக்‌ஷனை வேறு எங்கியாவதுகூட போட்டுக்கொள்ளுங்கள்' என்றிசைத்தார் மறுபடியும்.  மனதில் 'மாட்டேனே'  கூரியவாறே,  வாங்கிவந்து  விடுகிறேனென்று  வெளியில்  விரைந்து சென்று திரும்பினேன் பாட்டிலுடன். அவர் சிரிஞ்சை ரெடியிடுகையில், மேஜையில் மூடியிருந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்வையிட்டேன்.

'சீகல்' தான் முதலில் கண்ணில்பட்டது. நம்ம 'ஸ்டீவன் சீகல்' பற்றியதா... தோன்றிய எண்ணத்தோடு நீல அட்டை முழுவதையும் பார்த்தேன். 'டாக்டர்ஸ்' அதற்கு கீழே 'எரிச் சீகல் (Erich Segal)' என்றிருந்தது. ஒரு டாக்டர் 'மருத்துவ' சம்பந்தமா படிக்கலாம்... இவங்க ஏன் 'மருத்துவர்' சம்பந்தமா படிக்கிறாங்க? - குழப்பத்தோடு வெளியேறினேன், விடைபெற்று அன்று.

பின்னொருநாளில், ஒரு நடைபாதைக்கடையில் எரிச் சீகலின் 'லவ் ஸ்டோரி'  கண்ணில்பட்டது. மெல்லியப் புத்தகம் - படிக்க தூண்டும்வகையில். அந்த பெண்டாக்டரின் நினைவுவர, அப்புத்தகத்தை வாங்கினேன். மேற்சொன்ன நிகழ்வுகள், ஒரு புத்தகமும் அல்லது ஒரு எழுத்தாளரும் நமக்கு எப்படியெல்லாம் அறிமுகமாகக்கூடும் என்பதை சொல்லவே. படிக்கலானேன்...



ஒரு மெல்லிய காதல் கதைதான். ஆனால் ஒரு துள்ளலோடும் துடிப்போடும் அதைக் கையாண்டவிதத்தால் மனதை ஆக்கிரமித்தது சட்டென்று. 1970-ல் எழுதப்பட்ட நாவலது. கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுகள் தாண்டியும் அதன் புத்துணர்ச்சி குறையாமலிருந்ததற்கு, தீம் தான் காரணமாயிருந்திருக்க வேண்டும் - காதல். படித்துப்பாருங்கள்,  இன்னும் படித்திராவிட்டால் - அதைக் க்ளாஸிக் வரிசையில் வைப்பீர்கள்.

மனைவி மரணப்படுக்கையிலிருக்க, கணவன் நினைத்துப் பார்க்கும் ஃப்ளாஷ்பேக்-காக விரியும் எள்ளலும்,  காதலும்,  மோதலும்,  மற்ற  உணர்ச்சிகுவியுலுமான நிகழ்வுகள். வசனங்களே அந்த நாவலின் பலம். இப்படித்தான் ஆரம்பிக்கிறது அவர்களுக்கிடையேயான ஒரு உரையாடல்.

பெண்: "உன்னைப் பார்த்தால் ஒரு முட்டாள்பணக்காரன் போலிருக்கிறது".
ஆண்: "நல்லது... ஆனால் நான் ஏன் ஒரு சமர்த்துஏழையாக இருக்கக்கூடாது?"  
பெண்: "நான்தான் ஒரு சமர்த்துஏழை".
ஆண்: "எது உன்னை சமர்த்தாக்கியது?"
பெண்: "ஏனெனில் நான் உன்னுடன் காபியருந்திருக்கவில்லையே".
ஆண்: ஓஹ்... ஆனால் நான் இன்னும் உன்னை காபியருந்த அழைக்கவில்லையே". 
பெண்: "அதுதான்... நீ ஒரு முட்டாளென்று காட்டிக்கொடுத்தது."

தொடர்வேன்...






No comments:

Post a Comment